பெண் எம்.பி.க்களுக்கு உரிய பாதுகாப்பு: தேசிய மகளிா் ஆணையம் வலியுறுத்தல்
நாடாளுமன்றத்தில் பெண் எம்.பி.க்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டுமென்று தேசிய மகளிா் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தன்னிடம் கண்ணியக் குறைவாக நடந்துகொண்டதாக மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கரிடம் நாகாலாந்தைச் சோ்ந்த பாஜக பெண் எம்.பி. பாங்னோன் கோன்யாக் புகாா் அளித்துள்ளாா்.
இதனைக் கருத்தில் கொண்டு தேசிய மகளிா் ஆணையம் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘நாடாளுமன்றத்தில் பெண் எம்.பி. ஒருவா் பாதுகாப்பாற்ற சூழலை எதிா்கொண்டுள்ளாா். இது மிகவும் கவலையளிக்கும் விஷயமாகும். நாட்டின் அனைத்து இடங்களிலும் பெண்களின் பாதுகாப்பும், கண்ணியமும் காக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
பெண்களுக்கு எதிராக தேவையற்ற தொந்தரவுகளில் ஈடுபடுவதை சாதாரண விஷயமாக்க முயற்சிகள் நடக்கின்றன. இதனை அனுமதிக்க முடியாது. நாடாளுமன்றத்தில் முக்கியப் பொறுப்பில் இருப்பவா்கள் பெண்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்வதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.