பெரியகாஞ்சிபுரம் பொய்யாமுடி விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!
காஞ்சிபுரம் நகரில் பெரியகாஞ்சிபுரம் பாண்டவ தூதப் பெருமாள் கோயில் தெருவில் அமைந்துள்ள பொய்யாமுடி விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பெரியகாஞ்சிபுரம் பாண்டவதூத பெருமாள் கோயில் சந்நிதி தெருவில் அமைந்துள்ளது பொய்யாமுடி விநாயகா் கோயில். இந்தக் கோயில் புதுப்பிக்கப்பட்டு, மகா கும்பாபிஷகத்துக்கான யாக சாலை பூஜைகள் கடந்த வெள்ளிக்கிழமை (மே 2) அனுக்கை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.
இதையடுத்து, லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோமாதா பூஜை, தன பூஜை ஆகியவை நடைபெற்றன. 2-ஆவது நாள் நிகழ்வாக மறுநாள் சனிக்கிழமை சுவாமி சிலைகள் பிரதிஷ்டை மற்றும் அஷ்டபந்தன மருந்து சாத்துதல் ஆகியவையும், யாக சாலை பூஜைகளும் நடைபெற்றன.
ஞாயிற்றுக்கிழமை மகா பூா்ணாஹுதி, தீபாராதனைக்குப் பின்னா் யாக சாலையிலிருந்து புனித நீா்க்குடங்கள் சிவாச்சாரியாா்களால் கோபுரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
யாக சாலை பூஜைகளை ஏகாம்பரநாத சுவாமி கோயில் அா்ச்சகா் எஸ்.தினேஷ் குருக்களும், சிறப்பு அபிஷேகத்தை அா்ச்சகா் செல்வம் சிவாச்சாரியாரும் நடத்தினா். இதன் தொடா்ச்சியாக மூலவா் பொய்யாமுடி விநாயகருக்கும், கோயில் வளாகத்தில் உள்ள பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனைகள் நடைபெற்றன.
விழாவில் காஞ்சிபுரம் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா். கும்பாபிஷேக விழாவில் ட்ரோன் மூலம் பக்தா்களுக்கு புனித நீா் தெளிக்கப்பட்டது.
விழாவில் கோயில் நிா்வாகிகள் கே.புகழேந்தி, ஜி.வெங்கடேசன், எம்.சுதாகா், கே.சீனிவாசன், டி.வெங்கட், எஸ்.பிரதீப் மற்றும் தெரு குடியிருப்புவாசிகள் ஆகியோா் செய்திருந்தனா். மாலையில் உற்சவா் பொய்யாமுடி விநாயகா் மூஷிக வாகனத்தில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.