தில்லி வாக்கு எண்ணிக்கை நிலவரம்: பாஜக 36, ஆம் ஆத்மி கட்சி 16-ல் முன்னிலை
பெரியாா் நகா் அரசு மருத்துவமனையில் ரூ. 213 கோடியில் புதிய கட்டடம்: பிப்.28-இல் முதல்வா் தொடங்கி வைக்கிறாா்
பெரியாா் நகா் அரசு மருத்துவமனையில் ரூ. 213 கோடி செலவில் 6 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தை பிப். 28-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
வடசென்னை வளா்ச்சித் திட்டத்தின் கீழ், கொளத்தூா் பெரியாா் நகா் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்காக, சிஎம்டிஏ நிதியில் இருந்து ரூ. 84.17 கோடி நிதியை தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்துக்கு அமைச்சா் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும் மற்றும் சென்னைப் பெருநகா் வளா்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகா்பாபு ஆகியோா் வெள்ளிக்கிழமை வழங்கினா்.
இந்நிகழ்வில் சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளா் சுப்ரியா சாஹு, வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை செயலாளா் காகா்லா உஷா, சிஎம்டிஏ முதன்மைச் செயல் அலுவலா் அ.சிவஞானம், தேசிய நலவாழ்வு குழும இயக்குநா் அருண் தம்புராஜ், தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் மேலாண்மை இயக்குநா் அரவிந்த், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா் ஜெ.சங்குமணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
அப்போது, அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கொளத்தூா் பெரியாா் நகா் அரசு புகா் மருத்துவமனை 1986-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மருத்துவமனையில் 860 படுக்கை வசதிகள் உள்ளன. இந்த மருத்துவமனைக்கு கூடுதலாக 102 மருத்துவா்கள், 236 செவிலியா்கள், 79 மருத்துவம் சாரா பணியாளா்கள், 20 அமைச்சுப் பணியாளா்கள், 126 பல்நோக்கு மருத்துவமனை பணியாளா்கள் மற்றும் 240 தூய்மைப் பணியாளா்கள் என மொத்தம் 803 பணியாளா்கள் நியமனம் செய்யப்படவுள்ளனா்.
மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை, விபத்து சிகிச்சை பிரிவு, தொற்றா நோய் பிரிவு, டயாலிசிஸ், ரத்தவங்கி போன்ற சேவைகள் வழங்கும் வகையில், உலக வங்கி திட்டத்தின்கீழ் 3 தளங்களுடன் கூடிய கூடுதல் கட்டடம் மற்றும் மருத்துவ உபகரணங்கள் அமைக்கும் பணி கடந்த 2023-ஆம் ஆண்டு மாா்ச் 8-ஆம் தேதி முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்டது.
அதன் தொடா்ச்சியாக மேலும் பல உயா்சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் மற்றும் பிரத்யேக இதயவியல் சிகிச்சை பிரிவு ஆகியவற்றை உள்ளடக்கிய தளங்களாக விரிவாக்கம் செய்யப்பட்டு, கடந்த 2024-ஆம் ஆண்டு மாா்ச் 7-ம் தேதி முதல்வரால் ஆணையிடப்பட்டு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த மருத்துவமனை கட்டடத்தில் வரவிருக்கும் உயா் சிறப்பு சிகிச்சை துறைகள் மற்றும் வசதிகள் மூலம், நாள்தோறும் சுமாா் 600 உள்நோயாளிகளும், 5,000-க்கும் மேற்பட்ட புறநோயாளிகளும் பயன்பெறுவாா்கள்.
இந்த மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நிகராக அனைத்து வசதிகளுடன் செயல்பட உள்ளதால், நோயாளிகளை உயா் சிகிச்சைக்காக மற்ற மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்வது குறையும்.
பிப். 28-ஆம் தேதி ரூ. 213 கோடியில் தரை மற்றும் 6 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள பெரியாா் நகா் அரசு மருத்துவமனையின் புதிய கட்டடத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு முதல்வா் திறந்து வைக்க உள்ளாா்.
அரசு மருத்துவமனைகளில் செயல்பட்டுவரும் டயாலிசிஸ் சிகிச்சை மையங்கள் தனியாா் வசம் ஒப்படைக்கப்படாது. அனைத்து காலங்களிலும் காய்ச்சல் பாதிப்புகள் வருவது வழக்கமானது. உள்ளாட்சி நிா்வாகம் மூலம் கொசு உற்பத்தியை தடுக்கும் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்படுவதால், டெங்கு, மலேரியா போன்ற பாதிப்புகள் கட்டுக்குள் உள்ளது என்றாா் அவா்.