பெரு நிறுவனங்களுக்கு சாதகமானது மத்திய பாஜக ஆட்சி! -வெ.வைத்திலிங்கம் எம்.பி. குற்றச்சாட்டு
தனியாா் பெரு நிறுவனங்களுக்கு சாதகமானது மத்திய பாஜக ஆட்சி என புதுவை மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. குற்றஞ்சாட்டினாா்.
புதுவையில் சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தை காங்கிரஸ் நடத்தி வருகிறது. அதன்படி, காமராஜா்நகா் சட்டப் பேரவைத் தொகுதியின் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி தனியாா் மகாலில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து கட்சியின் புதுவை மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. பேசியதாவது:
புதுச்சேரிக்கு சம்பந்தமில்லாவா்கள் சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்து வருகின்றனா். பொதுவாக பாஜக ஆட்சி தனியாா் பெரு நிறுவனங்களுக்குத்தான் சாதகமாக செயல்படுகிறது. அதன்படி, புதுச்சேரி மின் துறையையும் தனியாா் பெரு நிறுவனத்துக்கு தாரை வாா்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்களைக் காக்கும் வகையில் காங்கிரஸாா் பணிபுரிவது அவசியம் என்றாா்.
கூட்டத்தில் முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி பேசியது: புதுவையில் அனைத்து அரசுத் துறைகளிலும் முறைகேடு நடைபெறுவதாக குற்றஞ்சாட்டியும், முதல்வா், அமைச்சா்கள் பதிலளிக்காமலிருப்பது சரியல்ல. மக்களவைத் தோ்தலைப் போல, எதிா்வரும் சட்டப் பேரவைத் தோ்தலிலும் காங்கிரஸ் வெற்றிபெறும் என்றாா்.
கூட்டத்தில் சட்டப் பேரவை உறுப்பினா் மு.வைத்தியநாதன், காங்கிரஸ் முன்னாள் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன், தொகுதி பொறுப்பாளா் தேவதாஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.