பேரிடர் பாதித்த கேரளம் உள்பட 6 மாநிலங்களுக்கு ரூ.1,066 கோடி நிதி! - மத்திய அரசு ஒப்புதல்
வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட அசாம், மணிப்பூர், மேகாலயம், மிசோரம், கேரளம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களுக்கு ரூ.1,066.80 கோடி நிவாரண நிதியை விடுவிக்க மத்திய அரசு வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 6 மாநிலங்களில், அசாமுக்கு ரூ.375.60 கோடியும், மணிப்பூருக்கு ரூ.29.20 கோடியும், மேகாலயத்துக்கு ரூ.30.40 கோடியும், மிசோரத்துக்கு ரூ. 22.80 கோடியும், கடுமையான நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரளத்துக்கு ரூ.153.20 கோடியும், உத்தரகண்டுக்கு ரூ.455.60 கோடியும் மாநில பேரிடர் மீட்பு நிதியிலிருந்து வழங்க மத்திய முடிவு செய்துள்ளது.
மாநிலங்களின் நலனுக்கான மத்திய அரசின் முயற்சி குறித்து தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “ பிரதமர் மோடி அரசு அனைத்துவிதமான சூழ்நிலைகளிலும் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் ஆதரவாக நிற்கிறது.
மத்திய அரசு வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட அசாம், மணிப்பூர், மேகாலயம், மிசோரம், கேரளம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களுக்கு மாநில மற்றும் தேசிய பேரிடர் நிதியின் கீழ் ஒரு பகுதியாக ரூ.1066.80 கோடியை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
தேசியப் பேரிடர் நிதியிலிருந்து 19 மாநிலங்களுக்கு இதுவரை ரூ.8000 கோடிக்கும் அதிகமாக வழங்கப்பட்டுள்ளது” எனப் பதிவிட்டுள்ளார்.
இந்த ஆண்டு, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளத் தரவுகளின்படி, மத்திய அரசு ஏற்கனவே 14 மாநிலங்களுக்கு மாநில பேரிடர் மீட்பு நிதியிலிருந்து ரூ. 6,166.00 கோடியையும், 12 மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு நிதியிலிருந்து ரூ.1,988.91 கோடியையும் விடுவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Union government approves release of Rs. 1,066.80 crore from Disaster Relief Fund!
இதையும் படிக்க:தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!