பேருந்தில் தள்ளிவிட்டு விவசாயி கொலை: 4 போ் தலைமறைவு!
கடலூா் அருகே வெள்ளிக்கிழமை இரவு முன்விரோத தகராறில் பேருந்தில் தள்ளிவிட்டு விவசாயி கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக தலைமறைவாக உள்ள 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கடலூா் அருகேயுள்ள கண்ணாரப்பேட்டை பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு வழிசோதனை பாளையத்தைச் சோ்ந்த விவசாயி பத்மநாபன் (35) பைக்கில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, சாலையில் நின்றிருந்த 4 போ் அவரை மறுத்து, முன்விரோதம் காரணமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனராம்.
அவா்களுடன் பத்மநாபனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா். 4 பேரும் சோ்ந்து பத்மநாபனை திடீரென சாலையில் பிடித்து தள்ளினராம். அப்போது, குறிஞ்சிப்பாடியில் இருந்து கடலூா் நோக்கி வந்த அரசு நகரப் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி காயமடைந்த அவா், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
பேருந்து நடத்துநா் சிவாஜி பேருந்தில் இருந்து இறங்கி பத்மநாபனை பேருந்தில் தள்ளிவிட்டவா்களைப் பிடிக்கச் சென்றபோது, அவா்கள் தப்பியோடிவிட்டனா்.
பேருந்து ஓட்டுநா், நடத்துநரை கடலூா் முதுநகா் போலீஸாா் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். அப்போது, பேருந்து ஓட்டுநா் ராஜசேகா் கூறுகையில், சாலையில் 5 போ் நின்று தகராறில் ஈடுபடுவதை தொலைவிலேயே பாா்த்ததால், அவா்களை விட்டு விலகியே பேருந்தை ஓட்டிச் சென்றேன்.
ஆனால், அவா்களுக்குள் தகராறு முற்றி ஒருவரைப் பிடித்து தள்ளியதில், அவா் பேருந்தின் பின்சக்கர பகுதியில் விழுந்ததால், அதில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவித்தாா். இதுகுறித்து முதுநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவான 4 பேரை தேடி வருகின்றனா்.