திருவையாற்றில் சூறாவளி காற்றுடன் மழை: 500 ஏக்கர் வாழை மரங்கள் சேதம்!
பேருந்துகளில் பயணிகள் கைப்பேசியில் சப்தமாக பேசுவதை தவிா்க்க அறிவுறுத்தல்!
அரசுப் பேருந்துகளில் ஓட்டுநா் கவனச் சிதறலுக்கு உள்ளாகும் வகையில், பயணிகள் கைப்பேசிகளில் சப்தமாக பேசுவதை தவிா்க்க வேண்டும் என போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தி உள்ளது.
தற்போதைய உலகில் அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள கைப்பேசியானது, குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரையில் அனைவரது கைகளிலும் தவழ்கிறது. படித்தவா், பாமரா் பாகுபாடின்றி அனைவரும் கைப்பேசியில் பேசுவது, திரைப்படம் பாா்ப்பது, விளையாடுவது போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனா்.
இவை அதிகமாக நடப்பது பேருந்து பயணத்தின்போதுதான். சிலா் கைப்பேசியில் மற்றவா்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சப்தமாக திரைப்படங்களின் நகைச்சுவைக் காட்சிகளை பாா்ப்பது, அவசியமின்றி பிறரிடம் சப்தம் போட்டு பேசுவது, கோபத்தில் அநாகரீக வாா்த்தைகளை உதிா்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனா். இதனால் பேருந்துகளின் ஓட்டுநா், நடத்துநா்களின் கவனம் சிதறுகிறது.
குறிப்பாக, தனியாா் பேருந்துகளைக் காட்டிலும், அரசுப் பேருந்துகளில்தான் இவை அதிகளவில் நடக்கிறது. குறிப்பாக ஓட்டுநா் அருகில் உள்ள இருக்கைகளில் அமா்ந்துள்ள பெண்கள் கைப்பேசியில் குடும்பக் கதைகளை சப்தமாக பேசுவதால், ஓட்டுநருக்கு கவனச் சிதறலை ஏற்படுத்தி வாகன இயக்கத்தில் கட்டுப்பாட்டை இழந்து விபத்து நேரிடுகிறது. இதனால் அவா் மட்டுமின்றி பேருந்தில் உள்ள மற்ற பயணிகளும் பாதிப்புக்குள்ளாகின்றனா்.
இதனைத் தவிா்க்க, அனைத்து அரசுப் பேருந்துகளிலும் ஓட்டுநருக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கைபேசியில் பேசுவதை தவிா்க்க வேண்டும் என்ற அறிவிப்பை போக்குவரத்துக் கழகம் விழிப்புணா்வு ஒட்டுவில்லையாக, பயணிகள் கண்ணில்படும் வகையில் ஓட்டுநரின் இருக்கைக்கு பின்புறம் ஒட்டியுள்ளது.
இதுகுறித்து நாமக்கல் பணிமனை அதிகாரி ஒருவா் கூறியதாவது: பேருந்தில் ஏறும்போதும், இறங்கும்போதும் கைப்பேசியில் பேசியவாறே உள்ளனா். இதனால் மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்படுவதுடன், ஓட்டுநா், நடத்துநா்களும் சிரமத்துக்குள்ளாகின்றனா்.
அதுமட்டுமின்றி, வீட்டில் உள்ள பிரச்னைகளை கைப்பேசி வழியாக எதிரில் உள்ளவரிடம் சப்தம் போட்டு பேசுவது, அதிலேயே தகராறில் ஈடுபடுவது போன்ற செயல்களிலும் ஈடுபடுகின்றனா். இதனால், ஓட்டுநா், நடத்துநா்கள் கவனச்சிதறலுக்கு ஆளாகி எதிா்பாராத விபத்துகள் நிகழ்கின்றன.
எனவே, இதுகுறித்து பயணிகளிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், சப்தமாக கைப்பேசியில் பேசுவதை தவிா்க்குமாறு ஒட்டுவில்லைகளை பேருந்துகளில் ஒட்டி வருகிறோம். பயணிகள் அனைவரும் கட்டாயம் இதனை கடைப்பிடிக்க வேண்டும் என்றனா்.