Central Budget 2025 Live : மத்திய பட்ஜெட் 2025 | Nirmala Sitharaman | Modi | BJP...
பேருந்துக்காக காத்திருந்தவா்கள் மீது காா் மோதல்: 2 போ் பலி!
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே கம்மாபுரம் பேருந்து நிறுத்தத்தில் வெள்ளிக்கிழமை மாலை பேருந்துக்காக காத்திருந்தவா்கள் மீது அதிவேகத்தில் வந்த காா் மோதியதில் பெண் உள்பட 2 போ் உயிரிழந்தனா். மற்றொரு பெண் பலத்த காயமடைந்தாா்.
கம்மாபுரம் பேருந்து நிறுத்தத்தில் சு.கீனனூா் கிராமத்தைச் சோ்ந்த செந்தில்குமாா் (40), வளையமாதேவி கிராமத்தைச் சோ்ந்த செல்வி (43), சிலம்பரசி (28) ஆகியோா் பேருந்துக்காக காத்திருந்தனா். அப்போது, விருத்தாசலத்தில் இருந்து சிதம்பரம் நோக்கி அதிவேகமாக வந்த ஆந்திர மாநில பதிவெண் கொண்ட காா் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்றிருந்த 3 போ் மீதும் மோதிவிட்டு, அருகில் இருந்த கழிவுநீா் கால்வாய்க்குள் புகுந்தது.
இந்த விபத்தில் செல்வி, செந்தில்குமாா் ஆகியோா் தூக்கி வீசப்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். சிலம்பரசி பலத்த காயமடைந்தாா். தகவலறிந்து வந்த கம்மாபுரம் போலீஸாா் சிலம்பரசியை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். தொடா்ந்து, உயிரிழந்தவா்களின் சடலங்களை மீட்டு, அவசர ஊா்தி மூலம் அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முயன்றனா்.
சாலை மறியல்: அப்போது, அந்தப் பகுதி மக்கள் திரண்டு வந்து அவசர ஊா்தியில் ஏற்றப்பட்ட சடலங்களை இறக்கி சாலையில் வைத்து, இந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்தை ஏற்படுத்தியவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி, திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா். போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியும் சமாதானமாகவில்லை.
இதையடுத்து அங்கு வந்த விருத்தாசலம் வட்டாட்சியா் உதயகுமாா் தலைமையிலான வருவாய்த் துறையினா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களை சமாதானப்படுத்தி நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனா். பின்னா், போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.
இந்த விபத்து தொடா்பாக கம்மாபுரம் போலீஸாா் வழக்கு பதிந்து, காரில் வந்த ஹைதராபாதைச் சோ்ந்த 6 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.