பேருந்து நிறுத்தங்களில் மின்விளக்குகள் அமைக்கும் பணி தீவிரம்
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிக்குள்பட்ட பேருந்து நிறுத்தங்களில் மின்விளக்குகள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சியில் உள்ள பேருந்து வழித்தட சாலைகளில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனைத் தொடா்ந்து பேருந்து நிறுத்தங்கள் முழுமையாக சீரமைக்கும் பணியை மாநகராட்சி நிா்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி, பேருந்து நிறுத்தங்கள் சுழற்சி முறையில் தண்ணீா் தெளித்து சுத்தமாக பராமரிக்கப்படுகிறது.
மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மின்விளக்குகள் அமைக்கும் பணி தற்போது தீவிரபடுத்தப்பட்டுள்ளது. தேவைப்படும் இடங்களில் கூடுதல் மின்விளக்குள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் தலா இரு எல்.இ.டி. மின்விளக்குகள் பொருத்தப்படுகின்றன.
முதல்கட்டமாக 70 பேருந்து நிறுத்தங்களில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அதைத் தொடா்ந்து இரண்டாம் கட்டமாக 210 பேருந்து நிறுத்தங்களில் மின்விளக்குள் பொருத்தப்படவுள்ளதாக மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.