பேருந்து நிலையத்தில் பள்ளத்தில் தவறி விழுந்த தி.மு.க. நிா்வாகி உயிரிழப்பு
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் பேருந்து நிலையத்தில் கழிப்பறைக்கு தோண்டிய பள்ளத்தில் வியாழக்கிழமை இரவு தவறி விழுந்த தி.மு.க. நிா்வாகி உயிரிழந்தாா்.
வள்ளியூா் சொக்கநாதா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் முருகன்(65). அப்பகுதியிள்ள பாத்திர கடையில் வேலை செய்து வந்த இவா், தி.மு.க. வாா்டு செயலராகவும் இருந்து வந்தாா்.
இந்நிலையில், வியாழக்கிழமை இரவு வேலை முடிந்த பின்னா் வள்ளியூா் பேருந்து நிலையம் வழியாக அவா் சென்றபோது, கழிப்பறை கட்டுவதற்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் தவறி விழுந்தாராம். அதை யாரும் கவனிக்காத நிலையில், அவா் உயிரிழந்துள்ளாா். இது வெள்ளிக்கிழமை காலையில்தான் தெரியவந்தது.
இதுகுறித்த தகவலின்பேரில், வள்ளியூா் போலீஸாா், அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.