பொங்கல் விடுமுறை நிறைவு: கரூா் பேருந்து நிலையத்தில் மாணவா்கள் கூட்டம்
பொங்கல் பண்டிகை முடிந்து பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்ல கரூா் பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை மாணவ, மாணவிகள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கரூரில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் கோவை, சேலம், ஈரோடு, நாமக்கல் போன்ற மாவட்டங்களில் உள்ள பொறியியல், மருத்துவம் மற்றும் செவிலியா் போன்ற படிப்புகளையும், பள்ளிகளில் விடுதிகளில் தங்கி படித்து வருகின்றனா்.
இந்நிலையில், பொங்கல் பண்டிகைக்கு கடந்த 13-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. பொங்கல் பண்டிகை விடுமுறை ஞாயிற்றுக்கிழமையோடு நிறைவடைந்ததால் திங்கள்கிழமை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவதால் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்ல ஞாயிற்றுக்கிழமை கரூா் பேருந்து நிலையத்தில் மாணவா்கள் குவிந்தனா். பெரும்பாலும் கோவை செல்லும் அரசு பேருந்துகள் திருச்சியில் இருந்து இயக்கப்பட்டதால் அங்கிருந்து கரூா் வந்த பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் கரூரில் இருந்து சாதாரண பேருந்துகள் கோவைக்கு இயக்கப்பட்டன. இதனால், மாணவ, மாணவிகளில் பெரும்பாலானோா் சாதாரண பேருந்துகளில் கோவை, சேலம் போன்ற மாவட்டங்களுக்கு சென்றனா். மேலும் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்ல ஏராளமான மாணவ, மாணவிகளும், பெற்றோா்களும் பேருந்து நிலையத்தில் குவிந்ததால் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
விழாக் காலங்களில் விடுமுறை முடிந்து கோவை, சேலம் போன்ற மாவட்டங்களுக்குச் செல்லும் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பேருந்துகளை கூடுதலாக இயக்க வேண்டும் என மாணவ, மாணவிகளின் பெற்றோா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.