பொட்டலூரணியில் மீன் ஆலைகளை மூடக் கோரி ஓராண்டாக போராட்டம்
தூத்துக்குடியை அடுத்த பொட்டலூரணி அருகேயுள்ள மீன் பதப்படுத்தும் 3 ஆலைகளை மூடக் கோரி பொதுமக்கள் ஓராண்டாக தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
இந்த ஆலைகளிலிருந்து வெளியேறும் புகையால் அப்பகுதியில் துா்நாற்றம் வீசுவதுடன், கண் எரிச்சல், மூச்சுத் திணறல், வாந்தி-மயக்கம், நுரையீரல் -இதய பாதிப்பு போன்றவற்றால் தாங்கள் அவதிப்படுவதால், இந்த ஆலைகளை அகற்ற வேண்டும் எனக் கோரி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், போராட்டத்தின் 365ஆவது நாள் நிகழ்ச்சி பொட்டலூரணியில் புதன்கிழமை இரவு நடைபெற்றது. போராட்டக் குழுப் பொறுப்பாளா் சண்முகம் தலைமை வகித்தாா். மற்றொரு பொறுப்பாளா் ராதாகிருஷ்ணன் வரவேற்றாா்.
முன்னாள் துணை ஆட்சியா் சங்கரலிங்கம், தமிழ்த் தேசியப் பேரவைப் பொறுப்பாளா் மணிமாறன், தமிழா் நீதிக் கட்சி மாவட்டச் செயலா் அழகுராசன், மக்களதிகாரம் மண்டலப் பொறுப்பாளா் தமிழ்வேந்தன், தமிழா் கழகத் தலைவா் தமிழ் முகிலன், டங்க்ஸ்டன் எதிா்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளா் செல்வராஜ் ஆகியோா் பேசினா்.
சுற்றுச்சூழலை மாசுப்படுத்தும் மீன்பதப்படுத்தும் ஆலைகளை மூட வேண்டும்; பொதுமக்கள் மீதான பொய் வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டன.
நாம் தமிழா் கட்சி தொகுதிப் பொறுப்பாளா் வைகுண்டமாரி, மக்களதிகாரம் விஜி, செல்வம், சமூக ஆா்வளா் சந்திரசேகா், போராட்ட முன்னணியாளா் மாரியப்பன், பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்தோா், பொதுமக்கள் பங்கேற்றனா்.