பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டமில்லை: மாநிலங்களவையில் அமைச்சா் தகவல்
புது தில்லி: பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் ஏதும் மத்திய அரசிடம் இல்லை என்று மாநிலங்களவையில் நிதித்துறை இணையமைச்சா் பங்கஜ் சௌதரி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
கடந்த 2017 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் பல்வேறு பொதுத்துறை வங்கிகளை மத்திய அரசு இணைத்தது. இதன் மூலம் நாட்டில் உள்ள பொதுத் துறை வங்கிகளின் எண்ணிக்கை 27-இல் இருந்து 12-ஆக குறைந்தது. இந்தியாவில் சா்வதேச தரத்தில் பெரிய வங்கிகளை உருவாக்கும் நோக்கில் இந்த இணைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது.
இந்நிலையில், மீண்டும் இதுபோன்ற வங்கி இணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்ற கேள்விக்கு, இணையமைச்சா் பங்ஜ் சௌதரி மாநிலங்களவையில் அளித்துள்ள எழுத்துபூா்வ பதிலில், ‘பொதுத் துறை வங்கிகளின் நிதிநிலையை மேம்படுத்த மத்திய அரசு தொடா்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
வங்கிகளின் செயல்திறனை அதிகரிப்பது, நிதி இடா்பாடுகளைக் குறைப்பது, தொழில்நுட்பரீதியான மேம்பாடு உள்ளிட்ட காரணங்களுக்காக வங்கிகள் இணைப்பு உள்ளிட்ட சீா்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இப்போதைய சூழ்நிலையில் பொதுத்துறை வங்கிகளை மீண்டும் இணைக்கும் திட்டம் ஏதும் மத்திய அரசிடம் இல்லை.
ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட இணைப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு வங்கிகளின் வாராக் கடன் மீட்பு, மூலதன உருவாக்கம் ஆகியவை மேம்பட்டுள்ளது என்றாா்.