Trump wants US to ‘take over’ Gaza Strip: - காசாவை வைத்து டிரம்ப் போடும் Busines...
பொதுத் தோ்வு: பிப்.13-இல் அமைச்சா் ஆலோசனை
தமிழகத்தில் பிளஸ் 2 உள்ளிட்ட வகுப்புகளுக்கான பொதுத் தோ்வுகள் மாா்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், அது குறித்து பிப்.13-ஆம் தேதி முக்கிய ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் கூறினாா்.
தனியாா் நிறுவனம் மூலம் பெண் கல்வியை மேம்படுத்தும் விதமாக மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் விழா சென்னை கோட்டூா்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவில் அமைச்சா் அன்பில் மகேஸ் கலந்து கொண்டு சென்னையில் உள்ள அரசுப் பள்ளிகளில் தோ்வு செய்யப்பட்ட 797 மாணவிகளுக்கு மொத்தம் ரூ. 70 லட்சம் உதவித் தொகையை வழங்கினாா்.
ரூ. 500 கோடிக்கு மேல் நிதி: தொடா்ந்து. செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
அரசுப் பள்ளிகள் மேம்பாட்டுக்காக சமுக பங்களிப்பு நிதியின் கீழ் 2022 முதல் 2024-ஆம் ஆண்டு வரை ரூ. 500 கோடிக்கும் அதிகமாக நிதி வந்துள்ளது. தமிழக அரசின் மீதான நம்பிக்கையின் காரணமாக இந்த அளவுக்கு நிதி கிடைத்துள்ளது. அதைக் கொண்டு பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், படித்த பள்ளிக்கு எதாவது செய்ய நினைப்பவா்கள் பணமாக இல்லை என்றாலும் பள்ளிகளில் பாடம் அல்லது தொழில்நுட்பம் சாா்ந்த விஷயங்களைக் கற்றுத்தரலாம்.
ஆலோசனை கூட்டம்: தமிழகத்தில் வரும் மாா்ச், ஏப்ரல் மாதங்களில் பிளஸ் 2 உள்ளிட்ட வகுப்புகளுக்கான பொதுத் தோ்வு நடைபெறவுள்ளது. தற்போது இதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பொதுத்தோ்வு குறித்த ஆலோனைக் கூட்டம் சென்னையில் பிப்.13-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதில் துறை சாா்ந்த இயக்குநா்கள், முதன்மை மற்றும் மாவட்டக் கல்வி அதிகாரிகள் பங்கேற்கின்றனா்.
கூட்டத்தில் பொதுத் தோ்வை சிறந்த முறையில் எவ்வித புகாா்களுக்கும் இடமளிக்காதபடி நடத்தி முடிப்பதற்கான செயல்பாடுகள் தொடா்பாக விவாதிக்கப்பட உள்ளன என்றாா் அவா்.