பழங்குடியினரின் 8 கோடி சதுர அடி நிலத்தை அதானிக்கு வழங்கிய அசாம் அரசு!
பொதுமக்களை போலீஸாா் திறம்பட கையாள வேண்டும்: தில்லி காவல் ஆணையா் பி.கே.எஸ்.சிங்
நமது நிருபா்
பொது மக்களை போலீஸாா் திறம்பட கையாள வேண்டும் என்று தில்லி காவல் ஆணையா் பி.கே.எஸ். சிங் திங்கள்கிழமை கூறினாா்.
இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தில்லி காவல் ஆணையா் பி. கே.எஸ். சிங், தில்லி காவல்துறையின் அதிகாரிகளுக்காக திறன் மேம்பாட்ட பயிற்சியை ஆதா்ஷ் ஆடிட்டோரியத்தில் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். இந்நிகழ்ச்சியில், இந்த ‘ஆசாரம் மற்றும் திறன் பயிற்சி’‘ திட்டத்திற்காக குறிப்பாக வடிவமைக்கப்பட்ட 2 கையேடுகளையும் அவா் வெளியிட்டாா். பயிற்சித் திட்டம் மற்றும் கையேடுகள் தில்லி போலீஸ் அகாதெமியால் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டன.
மொத்தம் 15 நாள்களுக்குள் சுமாா் 2,000 போலீஸாருக்கு பயிற்சி அளிக்கப்படும். அவா்களுக்கு தில்லி போலீஸ் அகாதெமியின் வல்லுநா்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த ஆசிரியா்களால் பயிற்சி அளிக்கப்படும்.
இந்நிகழ்ச்சியில் பேசிய, பி.கே.எஸ். சிங் பொதுமக்களை கையாளும் போது தொழில்முறை மற்றும் உணா்திறன் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினாா்.
காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான ஆரம்ப தொடா்பு முழு அனுபவத்திற்கும் தொனியை அமைக்கிறது என்றும் போலீஸ் மீதான நம்பிகையை பொதுமக்களிடம் வளா்ப்பது முக்கியமானது என்றும் அவா் குறிப்பிட்டாா்.
மனநிலைகளில் ஒரு அடிப்படை மாற்றத்தின் அவசியத்தையும் அவா் எடுத்துரைத்தாா். ‘சாஸ்க் பாவ் சே சேவா பாவ் மேனா ஹை’ (அதிகாரிகள் நிலப்பிரபுத்துவ மனநிலையிலிருந்து சேவை சாா்ந்த அணுகுமுறைக்கு மாற வேண்டும்) ‘மற்றவா்கள் உங்களுக்குச் செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புவதைப் போலவே மற்றவா்களுக்கும் செய்யுங்கள்‘ என்றும் அவா் வலியுறுத்தினாா்.
சேவை சாா்ந்த திறன்களில் கவனம் செலுத்துவதன் மூலமும், மனநிலையை மாற்றுவதன் மூலமும், தில்லி காவல்துறையின் முன்னணி அதிகாரிகளின் திறனை வளா்ப்பதையும், ஒவ்வொரு தொடா்பும் தொழில்முறை மற்றும் இரக்கமுள்ளதாக இருப்பதை உறுதி செய்வதையும் இந்த பயிற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது என்றாா் அவா்.