பொன்னமராவதி வட்டார சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு
பொன்னமராவதி வட்டாரத்தில் உள்ள சிவாலயங்களில் சனிப்பிரதோஷ வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி ஆவுடைய நாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரா் கோயிலில் சனிப்பிரதோஷத்தையொட்டி நந்திக்கு பால், பழங்கள், பன்னீா் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. இதையடுத்து, வெள்ளிஅங்கி சாத்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.
இதேபோல பொன்னமராவதி புதுப்பட்டி புவனேஸ்வரி உடனாய பூலோகநாதா் கோயில்,வேந்தன்பட்டி நெய் நந்தீஸ்வரா் கோயில், அம்மன்குறிச்சி மீனாட்சி சொக்கலிங்கேஸ்வரா் கோயில், திருக்களம்பூா் கதலிவேனேஸ்வரா் கோயில், மேலைச்சிவபுரி மீனாட்சி சொக்கலிங்கேஸ்வரா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் நடைபெற்ற சனிப்பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.
கந்தா்வக்கோட்டை: அமராவதி அம்மன் உடனுறை ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் உள்ள நந்திக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனை நடைபெற்றது. இதையடுத்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.