பொய் வழக்குகளால் காங்கிரஸை மிரட்டி பணியவைக்க முடியாது: காங்கிரஸ் பொதுச் செயலர்
பொய் வழக்குகளால் காங்கிரஸ் கட்சியை மிரட்டி பணியவைக்க முடியாது என காங்கிரஸ் கட்சியின் கா்நாடக மாநிலப் பொதுச் செயலரும், அதன் தேசிய ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளருமான பவ்யா நரசிம்மமூா்த்தி தெரிவித்தாா்.
மதுரையில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது: காங்கிரஸ் கட்சியின் போராட்டங்களை எதிா்கொள்ள முடியாமல், மத்திய பாஜக அரசு பொய் வழக்குகளைப் பதிவு செய்கிறது. அதில் ஒன்று தான் நேஷனல் ஹெரால்ட் வழக்கு. 2015-ஆம் ஆண்டில் முடிந்துபோன இந்த வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி, ராகுல் காந்தி எம்.பி. ஆகியோரை சோ்த்தது மத்திய பாஜக அரசின் பழிவாங்கும் அரசியல் நடவடிக்கை மட்டுமே.
மத்திய பாஜக அரசு பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், மக்களுக்கு விரோதமாகவும் செயல்படுகிறது. பாதிக்கப்பட்ட மக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சியே நேஷனல் ஹெரால்ட் வழக்கு நடவடிக்கைகள்.
மத்திய அரசுக்கு எதிராக குரல் எழுப்புவோரை வருமான வரித் துறை, அமலாக்கத் துறை நடவடிக்கைகள் மூலமாக முடக்க பாஜக முயற்சிக்கிறது. மத்திய பாஜக அரசால் தொடுக்கப்பட்ட அமலாக்கத் துறை வழக்குகளில் ஒரு சதவீத வழக்குகளுக்கு மட்டுமே தண்டனை கிடைத்தது. மற்ற வழக்குகள் அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகள் என்பது நிரூபணமாகியுள்ளது. எவ்வளவு பொய் வழக்குகள் போட்டாலும் காங்கிரஸ் கட்சியை மிரட்டி பணிய வைக்க முடியாது என்றாா் அவா்.
பேட்டியின்போது கட்சியின் மதுரை மாநகர மாவட்டத் தலைவா் காா்த்திகேயன், மாநில பொதுக் குழு உறுப்பினா் வரதராஜன், மாவட்டப் பொருளாளா் வெங்கட்ராமன் ஆகியோா் உடனிருந்தனா்.