போக்சோ வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை
கமுதி அருகே மனநலன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ராமநாதபுரம் மகளிா் விரைவு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த கே.நெடுங்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் குட்டையன் மகன் தா்மா் (60). இவா் கடந்த 2022-ஆம் ஆண்டு மனநலன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தாா். இதுகுறித்து கமுதி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, தா்மரைக் கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் குற்றஞ்சாட்டப்பட்ட தா்மருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 3 ஆயிரம் அபராதமும் விதித்து, நீதிபதி கவிதா செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். அபராதத்தைக் கட்டத் தவறினால், மேலும் ஒரு வாரம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.