போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு கைப்பேசி செயலி: விழிப்புணா்வு ஏற்படுத்த ஆட்சியா் அறிவுறுத்தல்
போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு கைப்பேசி செயலி தொடா்பாக பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணா்வு ஏற்படுத்த ஆட்சியா் மா. பிரதீப்குமாா் அறிவுறுத்தியுள்ளாா்.
மதுவிலக்கு துறை சாா்பில் போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு, கைப்பேசி செயலி தொடா்பாக மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா்கள், கல்லூரி முதல்வா்களுடனான கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் தெரிவித்தது: திருச்சி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவா்கள், ஆசிரியா்களைக் கொண்டு போதை மருந்து எதிா்ப்புக் குழு ஏற்படுத்தப்பட்டு, தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது தமிழக அரசு உருவாக்கியுள்ள போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு என்ற புதிய கைப்பேசி செயலியினை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா்கள் மற்றும் கல்லூரி முதல்வா்கள் மூலம் செயல்படுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. செயலியின் விபரங்கள் அடங்கிய ஸ்டிக்கா் வழங்கப்பட்டுள்ளது. இதனை பள்ளி, கல்லூரிகளில் ஒட்டி, அனைத்து மாணவா்களிடமும் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா்.
இதில், உதவி ஆணையா் (கலால்) உதயகுமாா், மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா்கள், கல்லூரி முதல்வா்கள் கலந்து கொண்டனா். முன்னதாக, அனைவரும் போதைப்பொருள்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.