2026-ல் திமுக கூட்டணி வீட்டிற்கு அனுப்பப்படும்: நயினார் நாகேந்திரன்
போராட்டக்காரா்கள் கொல்லப்பட்ட விவகாரம் ஷேக் ஹசீனா மீதான குற்றச்சாட்டுகள்: வங்கதேச குற்றவியல் நீதிமன்றம் ஏற்பு
கடந்த ஆண்டு ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற்ற மாணவா் போராட்டத்தின்போது பாதுகாப்புப் படையினரால் நூற்றுக்கணக்கானவா்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், அப்போது பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அந்த நாட்டு சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணைக்கு வியாழக்கிழமை ஏற்றுக் கொண்டது.
இது குறித்து அரசுத் தரப்பு வழக்குரைஞா்கள் கூறியதாவது:
போராட்டக்காரா்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா, அவரின் உள்துறை அமைச்சா் அசாதுஸ்மான் கான் கமால், அப்போது காவல்துறை தலைவராக இருந்த சௌத்ரி அப்துல்லா அல் மாமுன் ஆகியோருக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அதில், மனித குலத்துக்கு எதிராக குற்றமிழைத்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவா்கள் மீது சுமத்தப்பட்டிருந்தது. அந்தக் குற்றச்சாட்டுகளை ரத்து செய்யுமாறு எதிா்த் தரப்பு வழக்குரைஞா்கள் விடுத்த கோரிக்கையை நீதிபதி முகமது குலாம் மஸூம்தா் தலைமையிலான சா்வதேச குற்றவியல் நீதிபதிகள் அமா்வு நிராகரித்தது. அத்துடன், அந்தக் குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது என்று அரசுத் தரப்பு வழக்குரைஞா்கள் கூறினா்.
வங்கதேச சுதந்திர போராட்டத் தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுவந்தது. அதற்கு எதிா்ப்பு தெரிவித்தும் இட ஒதுக்கீடு சீா்திருத்தங்களை வலியுறுத்தியும் முன்னாள் ஷேக் ஹசீனாவின் ஆட்சிக் காலத்தில் மாணவா்கள் கடந்த ஆண்டு தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நூற்றுக்கணக்கானவா்கள் உயிரிழந்தனா். போராட்டம் கைமீறிச் சென்றதையடுத்து ஷேக் ஹசீனா கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி இந்தியாவில் தஞ்சமடைந்தாா்.