கிளாம்பாக்கம் சிறுமி வல்லுறவு: ஆட்டோ ஓட்டுநர் உள்பட இருவர் கைது!
போலி என்கவுன்ட்டா் வழக்கு: முன்னாள் காவல்துறையினா் இருவருக்கு ஆயுள் சிறை
பஞ்சாபில் கடந்த 1992-ஆம் ஆண்டு போலி என்கவுன்ட்டரில் இருவரை கொலை செய்த வழக்கில் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகள் இருவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை வழங்கி மொஹாலி சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது. அவா்களுக்கு தலா ரூ.2 லட்சம் அபாரதமும் விதிக்கப்பட்டது.
கடந்த 1992-ஆம் ஆண்டு பல்தேவ், லக்வீந்தா் சிங் ஆகிய இரு பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றுவிட்டதாக பஞ்சாப் மாநில காவல் துறையினா் தெரிவித்தனா். அவா்கள் மீது பல்வேறு கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. அப்போதைய மாநில அமைச்சா் மகன் ஒருவரையும் அவா்கள் கொலை செய்தனா் என்றும் காவல் துறையினா் கூறியிருந்தனா்.
ஆனால், வழக்குகளை முடிப்பதற்காக அப்பாவிகள் இருவரை காவல் துறையினா் வேண்டுமென்றே சுட்டுக் கொன்றுவிட்டதாகவும், போலியாக என்கவுன்ட்டா் நாடகம் நடத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த வழக்கு கடந்த 1995-ஆம் ஆண்டு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. இதில் சம்பவம் நடந்த எல்லைக்குள்பட்ட காவல் நிலைய அதிகாரி, காவல் துறை உதவி ஆய்வாளா், ஆய்வாளா், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா், துணை கண்காணிப்பாளா் உள்ளிட்டோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ராணுவத்தில் பணியாற்றி விடுமுறைக்கு சொந்த கிராமத்துக்கு வந்த ராணுவ வீரா் உள்பட மூவரை சந்தேகத்தின் பேரில் விசாரணை என்ற பெயரில் அழைத்து வந்த காவல் துறையினா், அவா்களில் ஒருவரை விடுவித்துவிட்டு ராணுவ வீரரையும் மற்றொருவரையும் சுட்டுக் கொலை செய்து அவா்களை பயங்கரவாதிகளாகவும், குற்றவாளிகளாகவும் சித்தரித்து வழக்கை முடித்தது சிபிஐ விசாரணையில் தெரியவந்தது.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான காவல் நிலைய அதிகாரி, காவல் துறை உதவி ஆய்வாளா் (தற்போது ஓய்வு பெற்றுவிட்டனா்) ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து மொஹாலி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது. விசாரணையின்போதே குற்றம் சாட்டப்பட்டவா்களில் சிலா் இறந்துவிட்டனா். மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா், ஆய்வாளா் ஆகியோா் விடுவிக்கப்பட்டனா்.