Shwetha Mohan: ``இசைக்கு நான் நேர்மையாக இருந்திருக்கேன்!" - கலைமாமணி விருது குறி...
போலீஸிடம் தங்க மோசடி செய்த சகோதரிகள் - கைதான பின்னணி
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அந்தோணி ஜார்ஜ் பிரபு (37). இவர், கடந்த 2013-ம் ஆண்டு காவல்துறையில் பணிக்குச் சேர்ந்தார். சென்னை ஆயுதப்படையில் காவலராகப் பணியிலிருந்த அந்தோணி ஜார்ஜ் பிரபுவுக்கு கடந்த 2021-ம் ஆண்டு முதல் நடிகர் சூர்யாவுக்கு பி.எஸ்.ஓ-வாக பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்தோணி ஜார்ஜ் பிரபு, தன் குடும்பத்துடன் சென்னையில் குடியிருந்து வருகிறார். இந்தநிலையில் நடிகர் சூர்யாவின் தி.நகர் வீட்டில் சுலோச்சனாவும் அவரின் தங்கை விஜயலட்சுமியும் வீட்டு வேலை செய்து வந்தனர். இதில் சுலோச்சனா, கூடுதல் வருமானத்துக்காக தீபாவளி சீட்டு நடத்தி வந்தார். தீபாவளி சீட்டில் சுலோச்சனாவும் அவரின் குடும்பத்தினரும் எதிர்பார்த்த வருமானம் கிடைக்காததால் அடுத்து என்ன பிசினஸ் செய்யலாம் என ஆலோசித்தனர். அப்போது தங்க நாணயங்களை விற்கலாம் என அவர்கள் முடிவு செய்திருக்கிறார்கள். இதையடுத்து தீபாவளி சீட்டு மூலம் அறிமுகமானவர்களிடம் சுலோச்சனாவும் விஜயலட்சுமியும் தங்க நாணயங்கள் விற்பனை குறித்து கூறியிருக்கிறார்கள். அப்போது மார்க்கெட் விலையைவிட குறைந்த விலைக்கு தங்க நாணயங்களை விற்பதாக சகோதரிகள் கூறியதும் அதை நம்பி சிலர் பணம் கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் தங்க நாணயங்களை சகோதரிகள் கொடுத்து தங்கள் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறார்கள். அதனால் சகோதரிகள் தங்க நாணய விற்பனை சூடுபிடித்திருக்கிறது.

இந்த சூழலில் நடிகர் சூர்யாவுக்கு பி.எஸ்.ஓ-வாக இருக்கும் காவலர் அந்தோணி ஜார்ஜ் பிரபுவிடமும் சகோதரிகள் சுலோச்சனாவும் விஜயலட்சுமியும் தங்களின் தங்க நாணய விற்பனை குறித்துக் கூறியிருக்கிறார்கள். அதனால் காவலர் அந்தோணி ஜார்ஜ் பிரபும் தன்னிடமிருந்த ஒரு லட்சத்து 92 ஆயிரம் ரூபாயை சகோதரிகள் சுலோச்சனா, விஜயலட்சுமியிடம் கொடுத்து தங்க நாணயங்களை வாங்கியிருக்கிறார். அந்த தங்க நாணயங்களைப் பரிசோதித்துப் பார்த்தபோது அவை ஒரிஜினல் எனத் தெரியவந்தது. குறைந்த விலைக்கு தங்க நாணயங்கள் கிடைத்ததால் அந்தோணி ஜார்ஜ் பிரபு அதிகளவில் தங்க நாணயங்களை வாங்க முடிவு செய்திருக்கிறார்.
இதற்காக தன் தந்தையின் புற்றுநோய் மருத்துவ செலவுக்காக வைத்திருந்த பணம், பெர்ஷனல் லோன், தெரிந்தவர்களிடம் கடன் என 50,37,857 ரூபாயை ஏற்பாடு செய்த காவலர் அந்தோணி, அந்தப் பணத்தை சகோதரிகள் சுலோச்சனா, விஜயலட்சுமியிடம் கொடுத்திருக்கிறார். ஆனால் பணத்தை வாங்கிய சகோதரிகள், தங்க நாணயங்களை காவலர் அந்தோணி ஜார்ஜ் பிரபுவுக்கு கொடுக்காமல் ஏமாற்றி வந்திருக்கிறார்கள். அதனால் காவலர் அந்தோணி ஜார்ஜ், பணத்தை திரும்ப கேட்டதும் 7,91,890 ரூபாய் வரை சகோதரிகள் திரும்ப கொடுத்திருக்கிறார்கள். அதன்பிறகு சகோதரிகள் தலைமறைவாகி விட்டனர். இதற்கிடையில் வீட்டில் வேலைப்பார்த்த சுலோச்சனா, விஜயலட்சுமி ஆகியோர், மோசடி வேலையில் ஈடுபடுவதை தெரிந்த நடிகர் சூர்யா தரப்பு அவர்களை வேலையிலிருந்து நீக்கி விட்டது.

பணத்தைப் பறிக்கொடுத்த காவலர் அந்தோணி ஜார்ஜ் பிரபு, தி.நகர் துணை கமிஷனர் குத்தலிங்கத்திடம் புகார் கொடுத்தார். அதன்பேரில் உதவி கமிஷனர் சுரேஷ்குமார் மேற்பார்வையில் மாம்பலம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். ஆனால் தங்க நாணய மோசடியில் ஈடுபட்ட சகோதரிகள், சென்னையில் குடியிருந்த வீட்டைகாலி செய்து விட்டு தலைமறைவாகிவிட்டனர். அதனால் போலீஸார், சகோதரிகளை ரகசியமாக கண்காணித்தபோது அவர்கள் தலைமறைவாக இருந்த இடம் தெரியவந்தது. இதையடுத்து சகோதரிகள் சுலோச்சனா, விஜயலட்சுமியை போலீஸார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் இந்த மோசடியில் சுலோச்சனாவின் கணவர் பாண்டியன், மகன்கள் பாலாஜி, பாஸ்கர், பாஸ்கரின் நண்பன் குன்றத்தூரைச் சேர்ந்த ராஜேஷ் உள்பட சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதனால் சுலோச்சனாவின் மகன்கள் பாஸ்கர், பாலாஜி ஆகியோரை போலீஸார் பிடித்து விசாரித்தனர். இந்தக் கும்பல் காவலர் அந்தோணி ஜார்ஜ் பிரபுவை மட்டுமல்லாமல் இன்னும் சிலரிடம் தங்க நாணயங்களை குறைந்த விலைக்கு விற்பதாகக் கூறி லட்சக்கணக்கில் ஏமாற்றியிருப்பது தெரியவந்தது. விசாரணைக்குப்பிறகு சுலோச்சனா, விஜயலட்சுமி, பாலாஜி, பாஸ்கர் ஆகியோரை போலீஸார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்ட சுலோச்சனாவும் அவரின் தங்கை விஜயலட்சுமியும் தங்களின் குடும்பத்தினருடன் சேர்ந்து தங்க நாணயங்களை குறைந்த விலைக்கு விற்பதாக மோசடியில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். இவர்கள் பிரபலமான நகைக்கடையில் மார்க்கெட் விலைக்கு தங்க நாணயங்களை வாங்கி அதை குறைந்த விலைக்கு முதலில் விற்றிருக்கிறார்கள். அதனால் இந்தக் கும்பலுக்கு நஷ்டம் ஏற்பட்டாலும் தங்கள் மீது நம்பிக்கை வர இப்படி செய்திருக்கிறார்கள். குறைந்த விலைக்குத் தங்க நாணயம் கிடைக்கும் ஆசையில் காவலர் அந்தோணி ஜார்ஜ் பிரபுவைப் போல அயனாவரத்தைச் சேர்ந்த துரைராஜ் என்பவரும் சகோதரிகள் சுலோச்சனா, விஜயலட்சுமியிடம் 35 லட்சம் ரூபாய் வரை பணத்தைக் கொடுத்து ஏமாந்திருக்கிறார். அவர் கொடுத்த புகாரின் பேரில் அயனாவரம் போலீஸார், இந்த கும்பல் மீது மேலும் ஒரு மோசடி வழக்கைப் பதிவு செய்திருக்கிறார்கள். மோசடி செய்த பணத்தை இந்தக் கும்பல் என்ன செய்தது என்று விசாரிக்க கைதானவர்களை போலீஸ் காவலில் எடுக்க முடிவு செய்திருக்கிறோம். கைதான பாலாஜி, பிகாம் படித்திருக்கிறார். பாஸ்கர், டிரைவராக வேலை செய்து வருகிறார். தலைமறைவாக இருக்கும் சிலரைத் தேடிவருகிறோம்" என்றனர்.