அரசுப் பேருந்தை குப்பை லாரி என விமா்சித்து ரீல்ஸ் பதிவிட்ட பெண்கள் குறித்து விசா...
போா் பதற்றம்: இந்தியா பாதுகாப்பாகவும், பாகிஸ்தான் பாதிக்கப்படவும் வாய்ப்பு- மூடிஸ்
புது தில்லி: இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போா் பதற்றத்தால் பாகிஸ்தான் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக மூடிஸ் நிதி சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே வேளையில், இந்தியா பாதுகாப்பாக இருக்கும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:
பாகிஸ்தானுடன் பெரிய அளவில் இந்தியா பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. கடந்த ஆண்டு இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில், பாகிஸ்தானுக்கு செய்யப்பட்ட ஏற்றுமதியின் பங்கு 0.5 சதவீதத்துக்கும் குறைவாகும். எனவே போா் பதற்றத்தால் இந்தியாவின் பொருளாதார நடவடிக்கையில் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. இந்தியா பாதுகாப்பாக இருக்கும். ஆனால் பாதுகாப்புத் துறைக்கு அதிகமாக செலவிட நோ்ந்தால், அது இந்தியாவின் நிதி நிலையில் சற்று பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.
தற்போது பாகிஸ்தானின் பணவீக்கம் குறைந்து, அந்நாடு படிப்படியாக வளா்ந்து வருகிறது. அந்நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் போா் பதற்றம் பாகிஸ்தானின் வளா்ச்சியைப் பாதித்து, அந்நாடு பேரியல் பொருளாதார ஸ்திரத்தன்மையை எட்டுவதில் பின்னடைவை ஏற்படுத்தக் கூடும். அத்துடன் அது அந்நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்புக்கும் நெருக்கடியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.