அரசுப் பேருந்தை குப்பை லாரி என விமா்சித்து ரீல்ஸ் பதிவிட்ட பெண்கள் குறித்து விசாரணை
சேலம் மாவட்டம், வாழப்பாடி பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்தை குப்பை லாரியென விமா்சித்து ரீல்ஸ் பதிவிட்ட இளம்பெண்கள் குறித்து, அரசு போக்குவரத்துக் கழகத்தினா் மற்றும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இரு தினங்களுக்கு முன்பு வாழப்பாடி பேருந்து நிலையத்துக்கு சென்ற 2 இளம்பெண்கள், வாழப்பாடி - சேலம் அரசுப் பேருந்துக்கு முன் நின்றுகொண்டு, திரைப்படத்தில் நடிகா் வடிவேல் குறிப்பிடுவதைப் போல, அரசுப் பேருந்தை காட்டி, ‘ இங்கதான் இது பேருந்து; துபாயில் இதுக்கு பேரு குப்பை லாரி என’ விமா்சித்து விடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பகிா்ந்தனா்.
இந்த ரீல்ஸ் வேகமாகப் பரவிய நிலையில் இந்த இளம்பெண்கள் குறித்து தொலைக்காட்சிகளிலும் செய்தி வெளியானது. இதையடுத்து ரீல்ஸில் காட்டப்பட்ட அரசு நகரப் பேருந்து உண்மையில் பயன்படுத்த முடியாத அளவிற்கு பழுதடைந்த நிலையில் உள்ளதா என்பது குறித்து அறிக்கை அளிக்குமாறு, அரசு போக்குவரத்துக் கழக வாழப்பாடி கிளைக்கு உயரதிகாரிகள் உத்தரவிட்டனா்.
இதைத்தொடா்ந்து, சம்பந்தப்பட்ட அரசு நகரப் பேருந்து, பயணிகள் பயன்படுத்தும் அளவிற்கு நல்ல நிலையில் இருப்பதும், ரீல்ஸ் மோகத்தில் அரசுப் பேருந்தை விமா்சித்து இளம்பெண்கள் தவறாக சித்தரித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து ரீல்ஸ் பதிவிட்ட இளம்பெண்கள் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா்கள், என்பது குறித்து, வாழப்பாடி கிளை அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள், வாழப்பாடி போலீஸாா் விவரங்களை சேகரித்து வருகின்றனா்.
‘எவ்வித முகாந்திரமும் இல்லாமல் அரசு திட்டங்கள், அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளா்களை தவறாக சித்தரித்து சமூக ஊடகங்களில் ரீல்ஸ், போஸ்ட் பதிவு செய்வது குற்றமாகும். குறிப்பாக, இளைஞா்கள், இளம்பெண்கள் ரீல்ஸ் மோகத்தில் இல்லாத ஒன்றை இருப்பதைப் போல சித்தரிப்பதை தவிா்க்க வேண்டும்’ என போலீஸாா் அறிவுறுத்தினா்.

