மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலையில் நாளை மீண்டும் நடை திறப்பு
பத்தனம்திட்டா: சபரிமலை ஐயப்பன் கோயில் ஜனவரி 14-ஆம் தேதி நடைபெறும் மகரவிளக்கு பூஜைக்காக திங்கள்கிழமை (டிச.30) மீண்டும் நடை திறக்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த 26 ஆம் தேதி மண்டல பூஜை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அன்று இரவு 10 மணிக்கு ‘ஹரிவராஸனம்’ ஒலிக்கப்பட்டு, கோயில் நடை அடைக்கப்பட்டது.
இதையும் படிக்க |குழந்தைகளை பகுத்தறிவோடு வளர்ப்பதே பெரிது : அமைச்சர் அன்பில் மகேஸ்
இந்த நிலையில், ஜன.14 ஆம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. இதற்காக திங்கள்கிழமை(டிச.30) மாலை 4 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட உள்ளது.
தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையைத் திறந்து வைக்க உள்ளார்.
பின்னர் மேல்சாந்தி சன்னதியில் உள்ள ஆழிக்குண்டத்தில் சம்பிரதாயமான ஜோதி ஏற்றிய பிறகு, பக்தர்கள் தரிசனத்திற்காக புனிதமான 18 படிகளில் ஏறலாம் என கூறப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் வியாழக்கிழமை(டிச.26) மண்டல பூஜை நிறைவடைந்து நடை சாத்தப்பட்டது. கடந்த 41 நாள்கள் மண்டல காலத்தில் சுமாா் 32.5 லட்சம் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனா்.