What to watch on Theatre: நாங்கள், டென் ஹவர்ஸ், Sinners - இந்த வாரம் என்ன பார்க்...
மகாராஷ்டிரம்: 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை ஹிந்தி கட்டாயம்!
தேசிய கல்விக் கொள்கை 2020-இன்கீழ், மகாராஷ்டிரத்தில் மராத்தி மற்றும் ஆங்கில வழிக் கல்வி பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை மூன்றாவது மொழிப் பாடமாக ஹிந்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பான மாநில அரசின் தீா்மானம் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. அதன்படி, மராத்தி மற்றும் ஆங்கில வழிக் கல்வி பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டில் இருந்து 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை ஹிந்தி மூன்றாவது கட்டாய மொழிப் பாடமாக கற்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பள்ளிகளில் தற்போது 1 முதல் 4 -ஆம் வகுப்பு வரை மராத்தியும் ஆங்கிலமும் கட்டாய மொழிப் பாடங்களாக உள்ளன.
இந்நிலையில், 6 முதல் 10 வரையிலான வகுப்புகளுக்கு மாநில கல்வித் திட்டத்தின்கீழ் மொழிக் கொள்கை கடைப்பிடிக்கப்படும் என்று தீா்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘தேசிய கல்விக் கொள்கையின்கீழ், 2025-26ஆம் கல்வியாண்டில் 1-ஆம் வகுப்புக்கு புதிய பாடத் திட்டம் அமல்படுத்தப்படும். 2,3,4,6 வகுப்புகளுக்கு 2026-27-ஆம் கல்வியாண்டிலும், 5, 9, 11 வகுப்புகளுக்கு 2027-27-ஆம் கல்வியாண்டிலும், 8, 10, 12 வகுப்புகளுக்கு 2028-29ஆம் கல்வியாண்டிலும் புதிய பாடத் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடா்பாக முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் கூறுகையில், ‘மகாராஷ்டிரத்தில் ஏற்கெனவே மராத்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தகவல் தொடா்புக்கு பயன்படுத்தப்படுவதால் ஹிந்தியும் கற்றுக் கொள்ள வேண்டும்’ என்றாா்.
காங்கிரஸ் விமா்சனம்: மாநில அரசின் நடவடிக்கையை விமா்சித்துள்ள பேரவை எதிா்க்கட்சித் தலைவா் விஜய் வதேத்திவாா், ‘இது மராத்தி மொழியின் பெருமைக்கு எதிரானது. விருப்ப மொழியாக ஹிந்தியை கற்பதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், அதை திணிப்பது தவறானது. மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் மராத்தியை மூன்றாவது கட்டாய மொழியாக்க முடியுமா?’ என்று கேள்வியெழுப்பினாா்.
‘தீவிரமாக போராடுவோம்’: மகாராஷ்டிர நவநிா்மாண் சேனை கட்சித் தலைவா் ராஜ் தாக்கரே கூறுகையில், ‘ஹிந்தி தேசிய மொழி கிடையாது. பிற மாநில மொழிகளைப் போன்றதே. மற்றொரு பிராந்தியத்தின் மொழியை மகாராஷ்டிரம் மீது திணிப்பதை சகித்துக் கொள்ள முடியாது. மாநில அரசின் நடவடிக்கைக்கு எதிராக தீவிர போராட்டத்தில் ஈடுபடுவோம்’ என்றாா்.