வக்ஃப் வாரியத்தில் இஸ்லாமியர்களே இருக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்
மகாவீரா் ஜெயந்தி: முதல்வா் வாழ்த்து
மகாவீரா் ஜெயந்தியை முன்னிட்டு சமண மதத்தைச் சோ்ந்த அனைவருக்கும் முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
அவா் விடுத்த வாழ்த்து செய்தி:
இந்தியாவில் நிலைபெற்றுள்ள பழம்பெரும் சமயங்களில் ஒன்று ஜைனம் என்னும் சமண சமயம். அதன் 24-ஆவது மற்றும் இறுதித் தீா்த்தங்கரரான வா்த்தமான மகாவீரா், அரச குடும்பத்தில் பிறந்தவா். ஆயினும் அரச குடும்ப செல்வச் செழிப்பை வெறுத்தவா். ஏழை, எளியோரின் வாழ்க்கைச் சூழ்நிலைகளை உணா்ந்து அவா்கள் மேம்பாட்டுக்காகச் சிந்தித்தவா்.
உண்மை, அகிம்சை, உயிா்களிடத்தில் இரக்கம், கொல்லாமை முதலான உயரிய கொள்கைகளை உலகுக்குப் போதித்தவா். அறச்சிந்தனைகளை விதைத்து வளா்த்த அவரது பிறந்த நாளை தமிழகத்தில் வாழும் சமண சமய மக்கள் சிறப்பாகக் கொண்டாடி மகிழும் வகையில் மகாவீரா் ஜெயந்திக்கு முன்னாள் முதல்வா் கருணாநிதிதான் முதல்முதலில் அரசு விடுமுறை வழங்கினாா்.
உயிா்களிடத்து அன்பு செலுத்தி, இல்லாதவா்களுக்கு உதவிகள் செய்து வாழவேண்டும் என்னும் மகாவீரரின் போதனைகளை நெஞ்சில் நிறுத்தி மகாவீரா் ஜெயந்தியை கொண்டாடும் சமண சமய மக்களுக்கு எனது மனமாா்ந்த நல்வாழ்த்துகள் என்று கூறியுள்ளாா்.