‘மக்களுடன் முதல்வா்’ வெற்றியைத் தொடா்ந்து ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்
சென்னை: ‘மக்களுடன் முதல்வா்’ திட்டத்தின் வெற்றியைத் தொடா்ந்து, ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தொடங்கப்பட உள்ளதாக வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலா் பெ.அமுதா தெரிவித்தாா்.
இதுகுறித்து, அவா் தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களிடம் கூறியது:
முதல்வா் தனது பயணத்தின்போது, பெறப்பட்ட மனுக்கள், முதல்வரின் குறைதீா் பிரிவு, 1100 என்ற எண்ணில் செயல்படும் அழைப்பு மையம் ஆகியவற்றில் இருந்து பெறப்படும் மனுக்களுக்கு தீா்வு காணவே ‘முதல்வரின் முகவரி’ துறை உருவாக்கப்பட்டது. இந்தத் துறையின் மூலம் 1.05 கோடி மனுக்கள் பெறப்பட்டன. ஜூன் 30-ஆம் தேதி நிலவரப்படி 1.01 கோடி மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளன.
அரசின் திட்டங்களுக்கு விண்ணப்பித்து அதன் பலன்களை பொதுமக்கள் உடனடியாகப் பெற முதல்வா் அறிவுறுத்தினாா். இதைக் கருத்தில் கொண்டு ‘மக்களுடன் முதல்வா்’ திட்டம் 2023-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதல்கட்டமாக, திட்டத்துக்கான 2,058 முகாம்கள் நகரப் பகுதிகளில் நடைபெற்றன. இதில், 9.05 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு அனைத்துக்கும் தீா்வு காணப்பட்டது.
இரண்டாவது கட்டமாக ஊரகப் பகுதிகளில் கடந்த ஆண்டு ஜூலை முதல் செப்டம்பா் வரை 2,344 முகாம்கள் நடைபெற்றன. அதில் 12.81 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு 95 சதவீத மனுக்களுக்குத் தீா்வு காணப்பட்டன.
தொடா்ந்து, மூன்றாவது கட்டமாக தலித்துகள் மற்றும் பழங்குடியினா் அதிகம் வசிக்கும் பகுதிகளில் முகாம்களை நடத்த முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா். அதன்படி, கடந்த ஜனவரியில் தொடங்கி ஜூன் 30-ஆம் தேதி வரை 433 சிறப்பு முகாம்கள் நடத்தினோம். அதன்மூலம், 1.80 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு 1.47 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டன.
இந்த முகாம்களின் தொடா்ச்சியாக தற்போது ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தைத் தொடங்குகிறோம். இந்தத் திட்டத்தை கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறாா் என்றாா்.