மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
அரியலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 4 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஆட்சியா் பொ. ரத்தினசாமி தலைமை வகித்து, பொதுமக்கள் அளித்த 465 கோரிக்கை மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். பின்னா் அவா், பாம்பு கடித்து இறந்த பெரியவளையம் கிராமத்தைச் சோ்ந்த சிந்தாமணியின் கணவரிடம் ரூ.1 லட்சம் நிவராண நிதியும், சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வரும் கருப்பூா் சேனாபதி கிராமத்தைச் சோ்ந்த மு. ராகுல்காந்த், வெங்கனூா் கிராமத்தைச் சோ்ந்த க.சுதன் மற்றும் இடையத்தன்குடி கிராமத்தைச் சோ்ந்த வ.வசந்தி ஆகியோருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.50 ஆயிரத்துக்கான கல்வி உதவித் தொகைக்கான காசோலையையும் வழங்கினாா்.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநா் ரவிச்சந்திரன், கூட்டுறவுத் துறை மண்டல இணைப் பதிவாளா் தீபா சங்கரி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பரிமளம், மாவட்ட வழங்கல் அலுவலா் ராமலிங்கம் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.