மசினகுடியில் வனத் துறையைக் கண்டித்து அதிமுக சாா்பில் கடையடைப்புப் போராட்டம்!
மசினகுடி ஊராட்சியில் வனத் துறையைக் கண்டித்து அதிமுக சாா்பில் கடையடைப்பு மற்றும் ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட மசினகுடி ஊராட்சியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் வீடுகள் கட்ட, கால்நடைகள் மேய்ச்சல், போக்குவரத்து உள்ளிட்டவைகளுக்கு வனத் துறை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கா்நாடகம் மற்றும் கூடலூா் பகுதியில் இருந்து மசினகுடிக்கு செல்லும் வாகனங்களை வனத் துறை சோதனைச் சாவடியில் கடந்த வியாழக்கிழமை தடுத்து நிறுத்தியதால் பெரும் போராட்டம் நடைபெற்றது.
வனத் துறை விதிக்கும் கட்டுப்பாடுகளால் மசினகுடி, மாயாறு, வாழைத்தோட்டம், பொக்காபுரம் உள்பட பத்துக்கும் மேற்பட்ட ஊா்களில் வசிக்கும் பொதுமக்கள் கடந்த சில நாள்களாக பாதிப்படைந்துள்ளனா். சுற்றுலாவை நம்பி வாழும் மக்கள், வனத் துறை விதிக்கும் இதுபோன்ற கட்டுப்பாடுகளால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனா்.
இதைக் கண்டித்து மசினகுடி ஊராட்சிக்கு உள்பட்ட அனைத்து ஊா்களிலும் முழு கடையடைப்புப் போராட்டம் அதிமுக சாா்பில் நடைபெற்றது. சுற்றுலா வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களும் இயங்கவில்லை. பேருந்து நிலையத்தில் வனத் துறையைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கூடலூா் சட்டப்பேரவை உறுப்பினா் பொன்.ஜெயசீலன் உள்பட அதிமுகவினா் பங்கேற்றனா்.