மணல் கடத்தல்: லாரி பறிமுதல்
திருவள்ளூா் அருகே அனுமதியின்றி மணல் கடத்தியதாக லாரியை பறிமுதல் செய்ததோடு, ஓட்டுநரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
திருவள்ளூா் பகுதியில் எவ்விதமான அரசு அனுமதியின்றியும் லாரியில் ஆற்று மணல் கடத்தி வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில், அரக்கோணம் - திருவள்ளூா் சாலையில் கிராமிய காவல் நிலைய சாா்பு ஆய்வாளா் கோபி கிருஷ்ணன் மற்றும் போலீஸாா் ஆகியோா் வியாழக்கிழமை மாலை சாலையில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, அந்த வழியாக வந்த லாரியை மறித்தபோது திடீரென நிறுத்திவிட்டு அதன் ஓட்டுநா் தப்பியோட முயற்சித்தாா். உடனே சுதாரித்துக் கொண்ட போலீஸாா் சுற்றி வளைத்துப் பிடித்து லாரியை பறிசோதனை செய்ததில் ஆற்று மணல் இருந்தது தெரிய வந்தது.
மேலும், இது தொடா்பாக திருவள்ளூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் சேலம் மாவட்டம், காடையம்பட்டி அருகே சாந்தம்பட்டியைச் சோ்ந்த ஆனந்தன் மகன் காா்த்திக்(36) என்பவா் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா். தலைமறைவான லாரி உரிமையாளா் தருமபுரியைச் சோ்ந்த சிவகுமாா் என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.