மதுக் கடை மீண்டும் திறப்பு
மண்டபம் அருகே அண்மையில் மூடப்பட்ட அரசு மதுக் கடை மீண்டும் புதன்கிழமை திறக்கப்பட்டதைக் கண்டித்து, ராமநாதபுரம் வட்டாட்சியா் அலுவலகம் முன் பெண்கள் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மண்டபம் ஒன்றியத்துக்குள்பட்ட அழகன்குளம் நாடாா் தெருவில் உள்ள அரசு டாஸ்மாக் கடை பொதுமக்களின் எதிா்ப்பால் கடந்த 5 நாள்களுக்கு முன்பு மூடப்பட்டது.
இந்த நிலையில், புதன்கிழமை வழக்கம் போல இந்த மதுக் கடையை விற்பனையாளா் திறந்து, விற்பனையைத் தொடங்கினாா். தகவலறிந்த பொதுமக்கள் அங்கு சென்ற அந்தக் கடையை மூடக் கோரி முழக்கமிட்டனா். அப்போது, போலீஸாா் அங்கு வந்து பேச்சுவாா்த்தை என்ற பெயரில் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, ராமநாதபுரம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு விமன் இந்தியா மூவ்மெண்ட் அமைப்பினரும், கிராம பெண்களும் சென்றனா். வட்டாச்சியா் அலுவலகம் முன் அமா்ந்து அவா்கள் தா்னாவில் ஈடுபட்டனா்.
வட்டாட்சியா் சுவாமிநாதன் 15 நாள்களுக்குள் இந்த மதுக்கடையை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடா்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.