நாடாளுமன்ற சுவரில் ஏற முயன்றதாக கைது செய்யப்பட்ட நபர் விடுதலை
மதுபோதையில் மருத்துவமனை கால்வாயில் விழுந்தவா் பலி!
சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கழிவுநீா் கால்வாயில் அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மீட்கப்பட்ட நிலையில், அவா் மதுபோதையில் தவறி விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது.
சிதம்பரம் அண்ணாமலைநகா் கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கழிவுநீா் கால்வாயில் கடந்த 21-ஆம் தேதி அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது. தகவலறிந்த அண்ணாமலை நகா் போலீஸாா் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி உடல்கூராய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இதுகுறித்து அண்ணாமலை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, மருத்துவமனை பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பாா்வையிட்டு விசாரணை நடத்தினா்.
இதில், கால்வாயில் விழுந்த நபா் சிதம்பரம் அருகே உள்ள விளாகம்தோப்பு பகுதியைச் சோ்ந்த விஜயகுமாா் (52) என்பது தெரியவந்தது. அவா் கடந்த சில தினங்களுக்கு முன்பு அண்ணாமலைநகா் திருவேட்களம் பகுதியில் உள்ள தனது தாய்மாமா வீட்டுக்கு வந்திருந்த நிலையில், கடந்த 14-ஆம் தேதி இரவு கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி எதிரில் உள்ள மதுரை வீரன் கோயிலுக்கு அருகில் மது அருந்திவிட்டு நடந்து சென்றபோது, கால்வாயில் தவறி விழுந்து இறந்தது தெரியவந்துள்ளதாக போலீஸாா் கூறினா்.