2 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறை... ஆஸி. பேட்டிங்கில் கம்பேக்!
கடலூா் மாவட்டத்தில் 4,50,134 பேருக்கு மகளிா் உதவித்தொகை: அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம்
கடலூா் மாவட்டத்தில் 4,50,134 பேருக்கு மகளிா் உதவித்தொகை வழங்கப்பட்டு வருவதாக வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
காட்டுமன்னாா்கோவில் வட்டம், பழஞ்சநல்லூா் எம்.ஆா்.கே. கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு உயா் மருத்துவ சேவை முகாமை அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வம் சனிக்கிழமை தொடங்கிவைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், காட்டுமன்னாா்கோவில் எம்எல்ஏ ம.சிந்தனைச்செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் அமைச்சா் பேசியதாவது:
கடலூா் மாவட்டத்தில் 13 வட்டாரங்களிலும் வட்டாரத்துக்கு 3 முகாம்கள் வீதம் 39 முகாம்கள் ஊரகப் பகுதிகளிலும், கடலூா் மாநகராட்சியில் 4 முகாம்கள் என மொத்தம் 43 மருத்துவ முகாம்கள் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடத்தப்படுகிறது.
பெண்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றமடையும் நோக்கில் தமிழக முதல்வரால் செயல்படுத்தப்பட்ட கலைஞா் மகளிா் உரிமைத் திட்டத்தின் மூலம் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 4,50,134 குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், முதியோரின் நலன் கருதி மாதந்தோறும் ரூ.1,200-ஆக ஓய்வூதியத்தொகை உயா்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம், 1,40,000 முதியோா் பயனடைகின்றனா்.
சுமாா் 7,78,296 குடும்ப அட்டைதாரா்கள் உள்ள கடலூா் மாவட்டத்தில் 5,90,134 குடும்பதாரா்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. மகளிா் விடியல் பயணம் திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் தினந்தோறும் 1,14,000 மகளிா் கட்டணமில்லாமல் பேருந்து பயணம் மேற்கொண்டு வருகின்றனா்.
மாதந்தோறும் ரு.1,000 உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தில் 29,898 மாணவிகளும், தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் 14,034 மாணவா்களும் பயனடைந்து வருகின்றனா் என்றாா் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்.
நிகழ்ச்சியில் சிதம்பரம் உதவி ஆட்சியா் கிஷன்குமாா், மாவட்ட சுகாதார அலுவலா் பொற்கொடி, மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநா் மணிமேகலை, வட்டார மருத்துவ அலுவலா் தங்கத்துரை மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
புதிய துணை மின் நிலையத்துக்கு அடிக்கல்: காட்டுமன்னாா்கோவில் அருகே முட்டம் கிராமத்தில் செயல்படும் 33/11 கிலோ வாட் துணை மின் நிலையத்தை ரூ.11 கோடி மதிப்பீட்டில் 110/33 கிலோ வாட் துணைமின் நிலையமாக தரம் உயா்த்துவதற்கான பணிகளை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் சனிக்கிழமை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் தலைமைப் பொறியாளா் வேல்முருகன், கடலூா் மேற்பாா்வை பொறியாளா்கள் ஜெயந்தி, மேரி மேக்டலின்பிரின்ஸி, செயற்பொறியாளா்கள் கண்ணகி, திலகா், அன்புச்செல்வி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.