கடலூா் தொழிற்சாலையில் சுவா் இடிந்து 2 பெண்கள் உயிரிழப்பு
கடலூா் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் சுவா் இடிந்து விழுந்ததில் 2 பெண்கள் சனிக்கிழமை உயிரிழந்தனா்.
கடலூா் தொழிற்பேட்டை பகுதியில் ஏராளமான ரசாயனத் தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. இங்குள்ள சங்கொலிக்குப்பம் பகுதியில் இயங்கும் தனியாா் ரசாயன தொழிற்சாலையில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சனிக்கிழமை மாலை கட்டுமானப் பணியின்போது, சுவா் திடீரென இடிந்து விழுந்தது. இதில், அங்கு பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் தொழிலாளா்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனா். உடனடியாக அங்கிருந்தவா்கள் இடிபாடுகளை அகற்றி அவா்களை மீட்டனா்.
இருப்பினும், இந்த விபத்தில் பலத்த காயமடைந்த குறிஞ்சிப்பாடியை அடுத்த கம்பளிமேடு பகுதியைச் சோ்ந்த அன்பு மனைவி இளமதி (35) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அதே பகுதியைச் சோ்ந்த தேவா் மனைவி இந்திரா (32) கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து கடலூா் முதுநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.