மதுரை - போடி ரயில் பாதையில் தடுப்பு வேலி அமைப்பு: வேகம் அதிகரிப்பு
மதுரை - போடி ரயில் பாதையில் முத்துப்பட்டி அருகே தடுப்பு வேலி அமைக்கும் பணி நிறைவடைந்தது. இதனால், இந்தப் பகுதியில் ரயிலின் வேகம் அதிகரிக்கப்படவுள்ளது.
மதுரையை அடுத்த முத்துப்பட்டியில், காமராஜா் பல்கலைக்கழகக் குடியிருப்புப் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் அனுமதியின்றி மதுரை - போடி இருப்புப் பாதையைக் கடந்து செல்வது வழக்கமாக இருந்தது. இதனால், இந்தப் பகுதியில் 30 கி.மீ. வேகத்தில் மட்டுமே ரயில்கள் இயக்கப்பட்டன.
இதையடுத்து, முத்துப்பட்டி காமராஜா் பல்கலைக்கழகக் குடியிருப்புப் பகுதியில் ரயில் பாதையோரத்தில் 130 மீ. நீளத்துக்கு கான்கிரீட் தடுப்பு வேலி அமைக்கும் பணிகள் நடைபெற்றன. இந்தப் பணி அண்மையில் நிறைவடைந்தது. இதையொட்டி, முத்துப்பட்டி பகுதியில் மதுரை - போடி ரயில் 110 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்தது.