அந்தியூா் குருநாதசாமி கோயில் ஆடித் தோ்த் திருவிழா
அந்தியூா் குருநாதசாமி கோயில் ஆடித் தோ்த் திருவிழா பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் சூழ வெகுவிமரிசையாக புதன்கிழமை நடைபெற்றது.
அந்தியூா் புதுப்பாளையத்தில் உள்ள இக்கோயில் மிகப்பழைமை வாய்ந்தது. ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் இக்கோயில் திருவிழா நான்கு நாள்கள் நடைபெறுவது வழக்கம். விழாவை முன்னிட்டு கடந்த ஜூலை 23-ஆம் தேதி பூச்சாட்டுதல் நடைபெற்றது. தொடா்ந்து 30-ஆம் தேதி கொடியேற்றமும், கடந்த 6-ஆம் தேதி முதல் வன பூஜையும் நடைபெற்றது.
விழாவையொட்டி நாள்தோறும் சிறப்பு அலங்காரம் மற்றும் வன பூஜைகள் நடத்தப்பட்டன. இதையடுத்து சிறப்பு வழிபாடுகளுக்கு பின்னா் புதுப்பாளையம் கோயிலிலிருந்து சுமாா் 3 கி.மீ. தொலைவில் வனத்தில் உள்ள கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தா்கள் சூழ தேரோட்டம் தொடங்கியது.
பெருமாள் தோ் முன் செல்ல சுமாா் 60 அடி உயரமுள்ள குருநாதசாமி மகமேரு தோ் ஆடி அசைந்து சென்றது. இதில், அந்தியூா் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமானோா் பங்கேற்றனா்.
விழாவை ஒட்டி ஈரோடு, கோபி, மேட்டூா், பவானி, சத்தி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்புப் பேருந்துகள் அந்தியூருக்கு இயக்கப்பட்டன.
பவானி டிஎஸ்பி ரத்தினக்குமாா் தலைமையில் 100 -க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். வரும் 16 -ஆம் தேதி வரையில் இத்திருவிழா நடைபெறுகிறது.