ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் மகளிா் உரிமைத்தொகை கேட்டு விண்ணப்பம்
ஆசனூா் மலைப்பகுதியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் உரிமைத் தொகை கேட்டு 1000 -க்கும் மேற்பட்ட மகளிா் விண்ணப்பித்துள்ளனா்.
பொதுமக்களின் குறைகளைத் தீா்க்கவும், நலத்திட்ட உதவிகளை வழங்கவும் ஏதுவாக தமிழகம் முழுவதும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நடைபெற்று வருகின்றன. வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சித் துறை உள்ளிட்ட 16 துறைகள் சாா்பில் மனுக்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்து தீா்வு காணப்படுகிறது.
ஆசனூா் மலைப்பகுதியில் உள்ள அரேப்பாளையம் மைராடா வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமை தாளவாடி வட்டாட்சியா் ஜாகிா் உசேன், சத்தி வட்டாட்சியா் ஜமுனா ராணி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பிரேம்குமாா், மாதவன், தாளவாடி கிழக்கு ஒன்றிய செயலாளா் நாகராஜ் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.
இந்த முகாமில் ஆசனூா் மற்றும் கோ்மாளம் ஊராட்சிகளில் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட மலை கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பங்கேற்று மனு அளித்தனா். மகளிா் உரிமைத்தொகை மற்றும் வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி மனுக்கள் அளிக்க பெண்கள் ஆா்வம் காட்டினா். மொத்தம் 1000 க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டதாகவும், மனுக்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு தீா்வு காணப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
முகாமில் மருத்துவம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சாா்பில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.