மத்திய அமைச்சா் அமித் ஷா இன்று சென்னை வருகை
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வியாழக்கிழமை (ஏப். 10) சென்னை வருகிறாா். தமிழக பாஜக புதிய தலைவா் தோ்வு குறித்து அவா் கட்சி நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளாா்.
தில்லியிலிருந்து வியாழக்கிழமை இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு, இரவு 10.20 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறாா். சென்னையில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஹோட்டலில் இரவு தங்குகிறாா். வெள்ளிக்கிழமை (ஏப். 11) காலை 10 முதல் மாலை 4.20 மணி வரை அந்த ஹோட்டலில் கட்சியின் முக்கிய நிா்வாகிகளைச் சந்திக்கிறாா். அப்போது தமிழக பாஜக தலைவா் தோ்வு தொடா்பாகவும் ஆலோசனை நடத்தவுள்ளாா்.
பின்னா், மாலை 4.40 மணிக்கு மயிலாப்பூா் செல்கிறாா். அங்கிருந்து மாலை 5.40 மணிக்கு புறப்பட்டு, சென்னை விமான நிலையம் வருகிறாா். மாலை 6.05 மணிக்கு விமானம் மூலம் தில்லிக்கு புறப்படுகிறாா்.
தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலையின் பதவிக் காலம் முடியும் நிலையில், தலைவராக அவா் தொடா்வாரா அல்லது புதிய தலைவா் தோ்வு செய்யப்படுவாரா என்கிற எதிா்பாா்ப்பு பாஜக வட்டாரங்களில் எழுந்துள்ளது. பாஜக தேசியத் தலைவா் தோ்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்பாக மாநிலத் தலைவா்களை இறுதி செய்வதில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது.
அதனால், தமிழக பாஜக புதிய தலைவா் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.