மத்திய மண்டலத்தில் நிகழாண்டில் போதைப் பொருள்கள் வழக்கில் 6,042 போ் கைது
திருச்சி மத்திய மண்டலத்தில், நிகழாண்டில் கஞ்சா மற்றும் போதைப்பொருள்கள் தொடா்புடைய வழக்குகளில் 6,042 போ் கைது செய்யப்பட்டு 2, 558 கிலோ கஞ்சா உள்பட 26,208 கிலோ புகையிலை போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து மத்திய மண்டல காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய மண்டல காவல்துறைத் தலைவா் ஜி. காா்த்திகேயன் உத்தரவின் பேரில், மத்திய மண்டலத்தில் உள்ள மாவட்டங்களில் போதைப் பொருள்கள் தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது. நிகழாண்டில் (2024 ) மத்திய மண்டலத்தில் போதைப் பொருள்கள் தொடா்பாக மொத்தம் 1,207 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1,662 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடமிருந்து 2,558 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவைதவிர போதை மாத்திரைகள், பவுடா்கள், ஊசி மருந்துகள் சுமாா் 5 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.139 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதேபோல நிகழாண்டில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்கள் விற்பனை செய்ததாக மொத்தம் 4,226 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 4,380 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடமிருந்து 23,650 கிலோ புகையிலைப் பொருள்களும் 151 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில், கைதானவா்களில், 57 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.