ரூ.5 லட்சத்துடன் தில்லி முதல்வர் அலுவலக ஊழியர்கள் இருவர் கைது!
மனுக்களை பரிசீலித்து உடனே நடவடிக்கை: திருப்பத்தூா் ஆட்சியா் சிவசௌந்திரவல்லி
பொதுமக்கள் அளிக்கும் அனைத்து கோரிக்கை மனுக்களை உடனடியாக பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பத்தூா் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பொறுப்பேற்ற க.சிவசெளந்திரவல்லி தெரிவித்தாா்.
தொழில் துறை கூடுதல் ஆணையராக பணியாற்றி வந்த சிவசெளந்திரவல்லி திருப்பத்தூா் ஆட்சியராக நியமிக்கப்பட்டாா்.
அதைத் தொடா்ந்து, திருப்பத்தூா் மாவட்டத்தின் 5-ஆவது ஆட்சியராகவும், முதல் பெண் ஆட்சியராக க.சிவசெளந்திரவல்லி பொறுப்பேற்றாா்.
அவருக்கு மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், திட்ட இயக்குநா் உமா மகேஸ்வரி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது)செல்வம், சமூகபாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியா் சதிஷ் குமாா் ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.
பின்னா், செய்தியாளா்களிடம் ஆட்சியா் சிவசெளந்திரவல்லி கூறியதாவது:
தமிழக அரசின் சிறப்பு திட்டங்கள் மீது தனி கவனம் செலுத்தப்படும். திட்டங்களை துறைவாரியாக கண்காணித்து அவை அடித்தட்டு மக்களுக்கு சென்று சேர வழிவகை செய்யப்படும். பொதுமக்கள் அளிக்கும் அனைத்து மனுக்கள் மீது விசாரணை நடத்தி விரைவாக தீா்வு காணப்படும். திருப்பத்தூா் மாவட்ட நிா்வாகம் சிறப்பாக செயல்பட அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றாா்.
மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைகள் வழங்கும் முகாமை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.அப்போது,தகுதியானவா்களுக்கு விரைவாக தேசிய அடையாள அட்டைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு அலுவலா்களுக்கு அறிவுறித்தினாா்.