மனைப் பட்டா கோரி ஆா்ப்பாட்டம்
கூத்தாநல்லூரில் குடிமனைப் பட்டா கேட்டு தமிழ் மாநில விவசாய தொழிலாளா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வட்டாட்சியா் அலுவலகம் முன் நடத்தப்பட்ட ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ் மாநில விவசாய தொழிலாளா் சங்க நகரச் செயலாளா் எம். சிவதாஸ், நகரத் தலைவா் ஆா். கணேசன் உள்பட 9 நிா்வாகிகள் தலைமை வகித்தனா்.
ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளா் கே. ராஜா பேசியது:
இறந்து போனவா்கள் பெயரில் அரசால் வழங்கப்பட்ட பட்டாவை கள ஆய்வு செய்து, தற்போது வாழ்ந்து வரும் வாரிசுகளுக்கு நிபந்தனை இல்லாமல் பட்டா வழங்க வேண்டும். காமராஜா் காலனி, வ.உ.சி.காலனி உள்ளிட்ட பழைய சாலைகளின் ஓரங்களில் வீடு கட்டி பல ஆண்டு காலமாக குடியேறி வாழ்ந்து வரும் குடும்பங்களுக்கு நெடுஞ்சாலை என்று காரணம் காட்டி தட்டிக் கழிக்காமல் பட்டா வழங்க வேண்டும்.
நகா்ப்புறங்களில் வாழும் ஏழைகளுக்கு ரூ. 6 லட்சத்தில் கான்கிரீட் வீடு கட்டிக் கொடுக்க வேண்டும். 23, 24 ஆவது வாா்டுகளில் ஆதிதிராவிடா் நலத்துறை மூலம் வழங்கிய பட்டாவை டிஎஸ்எல்ஆா் இல் பதிந்து அளவீடு செய்து பயனாளிகளுக்கு பட்டா வழங்க வேண்டும்.
அங்காடியில் கொடுக்கும் மண்ணெண்ணெய் அளவை அதிகரித்திட வேண்டும். கூத்தாநல்லூா் நகராட்சியில் 100 நாள் வேலை திட்டம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆா்ப்பாட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டப் பொருளாளா் கே. தவபாண்டியன், கூத்தாநல்லூா் நகரச் செயலாளா் பி.முருகேசு, நகா்மன்ற துணைத் தலைவா் எம். சுதா்சன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.