மனைவியை கவனிக்க விருப்ப ஓய்வு எடுத்த ஊழியர் - ஃபேர்வெல் நிகழ்வில் கணவன் கண்முன்னே உயிரிழந்த சோகம்
சில கணவன் - மனைவி இடையே அதீத அன்பு இருக்கும். ஒருவர் இல்லாமல் ஒருவரால் வாழ முடியாத அளவுக்கு இருவருக்கும் இடையே பாசம் இருக்கும். ராஜஸ்தான் மாநிலத்தில் கோடா என்ற இடத்தில் இருக்கும் மத்திய அரசுக்கு சொந்தமான குடோனில் மேலாளராக பணியாற்றி வந்தவர் தேவேந்திரா. இவருக்கு ஓய்வு பெற இன்னும் மூன்று ஆண்டுகள் இருக்கிறது. இந்த நிலையில் அவரின் மனைவி தினாவிற்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. அவர் இருதய நோயாளியாவார். அவரை கவனித்துக்கொள்வதற்காக தேவேந்திரா பணியில் இருந்து ஓய்வு பெற 3 ஆண்டுகள் இருந்த நிலையிலும் விருப்ப ஓய்வு பெற முடிவு செய்தார்.
பணியில் கடைசி நாளில் ஊழியர்கள் அனைவரும் சேர்ந்து தேவேந்திராவிற்கு பிரியாவிடை(Farewell) பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
அந்த பார்ட்டியில் தேவேந்திராவும், அவரின் மனைவியும் கலந்து கொண்டனர். இருவருக்கும் ஊழியர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். விழா உற்சாகமாக சென்று கொண்டிருந்த போது தினா தனக்கு லேசான மயக்கம் வருவது போல் இருக்கிறது என்று தெரிவித்தார். உடனே தேவேந்திரா தனது மனைவியை மெதுவாக இருக்கையில் அமர வைத்து அவரின் முதுகை பிடித்து தடவிக்கொடுத்தார். தேவேந்திராவும், மற்றவர்களும் தண்ணீர் கொண்டு வரும்படி கேட்டுக்கொண்டனர். ஒருவர் வீடியோவிற்கு போஸ் கொடுக்கும்படி கூறி தனது மொபைலில் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார்.
அந்நேரம் தினா அப்படியே தனது தலையை மேஜை மீது சாய்த்தார். அவரது கணவர் அவரை எழுப்ப பார்த்தார். ஆனால் அவர் அப்படியே சரிந்து விழுந்தார். உடனே தண்ணீர் கொண்டு வரும்படி அனைவரும் கத்தினர். மேலும் அவரை அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அவரை சோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார். கணவன் கண் முன்னிலையில் மனைவி அப்படியே விழுந்து இறந்தது அனைவருக்கும் கண்களில் கண்ணீரை வரவழைக்கும் வகையில் இருந்தது. மனைவியை கவனித்துக்கொள்வதற்காக விருப்ப ஓய்வு எடுத்த தேவேந்திராவால் தனது மனைவிக்கு சேவை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி அனைவரது கண்களிலும் கண்ணீரை வரவழைத்துள்ளது.