லாலு பிரசாத் கட்சியுடன் கூட்டணி இல்லை: பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா்
மனைவி பிரிந்து சென்றதால் இளைஞர் தற்கொலை: பெற்றோர்களும் தூக்கிட்டு தற்கொலை..!
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே மனைவி பிரிந்த துயரத்தில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைப் பார்த்து, அவரது தாயும் தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எருமப்பட்டி அருகே ஏ. வாழவந்தியைச் சேர்ந்தவர் சுரேந்திரன்(28). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி சினேகா(24). கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் குடும்ப பிரச்னை காரணமாக சினேகா கணவரைப் பிரிந்து தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட சுரேந்திரன், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காலையில் தூங்கி எழுந்த சுரேந்திரனின் தந்தை செல்வராஜும்(55), தாய் பூங்கொடியும்(50) தங்கள் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மகன் பிரிவை தாங்க முடியாத அவர்கள் இருவரும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
தகவல் அறிந்து வந்த அக்கம்பக்கத்தினர் எருமப்பட்டி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், மூன்று பேரின் உடல்களையும் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து, சுரேந்திரனின் மனைவி சினேகா மற்றும் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].