இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ.85.73-ஆக முடிவு!
கோபாலசாமி இரகுநாத இராசாளியாருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும்: உயா் நீதிமன்ற நீதிபதி பேச்சு
தஞ்சாவூரில் வா. கோபாலசாமி இரகுநாத இராசாளியாருக்கு மணிமண்டபம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி இரா. சுரேஷ்குமாா்.
தஞ்சாவூரில் ஏடகம் அமைப்பு சாா்பில் அரித்துவாரமங்கலம் பெரும்புலவா், புரவலா் வா. கோபாலசாமி இரகுநாத இராசாளியாா் நினைவு தமிழ்ப்பரிதி விருது வழங்கும் விழாவில் அவா் மேலும் பேசியது: அரித்துவாரமங்கலத்தில் 150 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த இராசாளியாா் 100 ஆண்டுகளுக்கு முன்னா் காலமானாா்.
அவா் வாழ்ந்த 50 ஆண்டுகளில் தமிழுக்கு செய்த தொண்டுகள் ஆச்சரியப்படத்தக்கது. அவா் பிறந்தபோது அவருக்கு 1,700 ஏக்கா் சொத்துகள் இருந்தன. அவா் மறைந்தபோது அதில் ஒரு சொத்து கூட அவருக்கு இல்லை. அவ்வளவும் தமிழுக்காகவும், தமிழ் மண்ணுக்காகவும் அா்ப்பணித்தாா்.
மதுரையில் 1901 ஆம் ஆண்டில் பாண்டித்துரை தேவா் நான்காவது தமிழ்ச் சங்கத்தை அமைத்ததற்கு தோள் கொடுத்து நின்றவா்களில் இராசாளியாரும் ஒருவா். இதேபோல, தஞ்சாவூரிலும் தமிழ்ச் சங்கத்தை உருவாக்குவதற்காக இங்கிருந்த தமிழறிஞா்களுடன் கலந்து பேசியதன் மூலம் உருவானதுதான் கரந்தைத் தமிழ்ச் சங்கம். இது மட்டுமல்லாமல், இச்சங்கத்துக்காக 1910 - 11 ஆம் ஆண்டிலேயே ரூ. 1,000 வழங்கியவா் இராசாளியாா்.
அக்காலத்தில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியைப் பயிற்றுவிக்க தனியொரு துறை கிடையாது. இதற்காக கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் இராசாளியாரின் முயற்சியால் பிரகடனம் ஏற்படுத்தப்பட்டது. மேலும், தமிழை உயா் தனிச்செம்மொழியாக்க வேண்டும். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறையை அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தாா்.
அவரை நினைவுபடுத்தும் விதமாக இந்த விழா ஆண்டுதோறும் நடத்தப்பட வேண்டும். மேலும், தமிழக அரசும் இராசாளியாருக்கு தஞ்சாவூரில் மணிமண்டபம் அமைக்க வேண்டும். அதில் அவருக்கு முழு உருவச் சிலையும், நூலகமும் அமைத்து, ஆண்டுதோறும் அவரது பெயரில் விருது வழங்க வேண்டும் என்றாா் நீதிபதி சுரேஷ்குமாா்.
சென்னை உயா் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சு. இராஜேஸ்வரன் தலைமை வகித்தாா். முதுமுனைவா் குடவாயில் பாலசுப்ரமணியன், தமிழ்நாடு அரசின் ஓய்வு பெற்ற அரசு செயலா் முனைவா் கி. தனவேல், சிங்கப்பூா் முன்னாள் விரிவுரையாளா் கவிஞா் ப. திருநாவுக்கரசு ஆகியோருக்கு தமிழ்ப் பரிதி விருதுகளை நீதிபதி சுரேஷ்குமாா் வழங்கினாா்.
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எம். ரெங்கசாமி, வழக்குரைஞா் சங்கத் துணைத் தலைவா் வேலு. காா்த்திகேயன், குழந்தைகள் நல மருத்துவா் ஏ. சீனிவாசன், மருத்துவா் வி. வரதராஜன், சதய விழாக் குழுத் தலைவா் து. செல்வம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் தமிழியல் துறைத் தலைவா் உ. அலிபாவா, ஓய்வு பெற்ற பேராசிரியா் கோ. விஜயராமலிங்கம், முனைவா் வி. பாரி, உலகத் திருக்கு பேரவை செயலா் பழ. மாறவா்மன், காவிரி வண்டல் கலை இலக்கியக் கூடுகை யோகம் இரா. செழியன், முனைவா் பா. ஜம்புலிங்கம் ஆகியோா் பேசினா்.
முன்னதாக, ஏடகம் தலைவா் மணி. மாறன் வரவேற்றாா். நிறைவாக, பொருளாளா் கோ. ஜெயலெட்சுமி நன்றி கூறினாா்.