மன அழுத்தத்தை ஏற்படுத்திய கல்லூரி நிர்வாகம்: உதய்பூரில் பல் மருத்துவ மாணவி தற்கொலை!
உதய்பூர் அருகேயுள்ள டெபாரியில் பல் மருத்துவம் பயிலும் தனியார் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் காவல்துறை காவலரின் ஒரே மகள் ஸ்வேதா சிங்(25). இவர் உதய்பூரில் டெபாரியில் உள்ள பசிபிக் பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இறுதியாண்டு பயின்று வந்தார். ஜூலை 25 அன்றிரவு விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் ஸ்வேதாவின் உடலை பிரதே பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட அறையில் அவர் எழுதிய கடிதம் ஒன்றை போலீஸார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் மன ரீதியாக கல்லூரி பேராசிரியர்களால் தான் துன்புறுத்தப்பட்டதாகவும் எழுதியிருந்தார். குறிப்பாக இருவரின் பெயர்களைக் குறிப்பிட்டிருந்தார்.
மாணவர்களை வேண்டுமென்றே தேர்வில் தோல்வியடையச் செய்தல், தேர்வுகளை நடத்துவதில் தாமதப்படுத்துதல் போன்றவை தொடர்ச்சியாக நிகழ்ந்து வந்துள்ளது. அந்தவகையில் ஸ்வேதாவின் தேர்வு அட்டவணையில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டுள்ளது. தோல்வியடைந்த மாணவர்களுக்கு கல்லூரி விதிமுறையின்படி ஆறு மாதங்களுக்குள் மீண்டும் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். ஆனால் ஸ்வேதாவின் தேர்வுகள் ஒன்றரை ஆண்டுகள் தாமதப்படுத்தப்பட்டதாகவும், பயிற்சியாளராக இருந்திருக்க வேண்டிய ஸ்வேதா இன்னும் இறுதி ஆண்டுக்கான முதல்கட்ட தேர்வை எழுதிக் கொண்டிருப்பதாக சக மாணவி ஒருவர் கூறினார்.
கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை காலை, நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஒன்றுகூடி ஸ்வேதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்று பதாகைகள் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர். மேலும் கல்லூரி நிர்வாகம் தேர்வுகள், வருகைக்குத் தொடர்ந்து பணம் கேட்டதாகவும், குறிப்பாக ஏழை மாணவர்களைக் குறிவைத்து பணம் கேட்டதாகவும் குற்றம் சாட்டினர்.
இதையடுத்து குற்றம் சாட்டப்பட்ட இரு பேராசிரியர்களும் கல்லூரி நிர்வாகத்தால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
உள்ளூர் காவல் ஆய்வாளர் ரவீந்திர சிங் கூறுகையில், விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், ஆசிரியர்கள் குறித்து விசாரிக்கவும், நிர்வாக பதிவுகளை ஆய்வு செய்யவும் போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
மாணவியின் தந்தை வரும் வரை போலீஸார் காத்திருப்பதாகவும், பின்னர் பிரேதப் பரிசோதனை செய்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும் என்று அவர் கூறினார்.
மாணவர்களின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த கல்லூரியை நிர்வகிக்கும் பசிபிக் குழுமத்தின் தலைவர் ராகுல் அகர்வால், மாணவர்களின் குறைகளை அடுத்த இரண்டு முதல் மூன்று மாதங்களுக்குள் தீர்வு காணப்படுவதாக உறுதியளித்தார். முந்தைய புகார்களைக் கவனிக்கத் தவறியதற்காகக் கல்லூரி முதல்வர் டாக்டர் ரவிகுமாரை அவர் கண்டித்தார்.