இந்தியாவுக்கு எதிரான தோல்விக்கு காரணம் என்ன? நியூசி. வேகப் பந்துவீச்சாளர் பதில்!
மயிலாடுதுறை: மாற்றுத்திறனாளிகளுக்கு பிப்.7-இல் வேலைவாய்ப்பு முகாம்
மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளி இளைஞா்களுக்கான தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் பிப்ரவரி 7-ஆம் தேதி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மயிலாடுதுறை மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக தரைதளத்திலுள்ள மக்கள் குறைதீா் நாள் கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை (பிப்.7) காலை 9 மணிக்கு தொடங்கி 3 மணிவரை மாற்றுத்திறனாளி இளைஞா்களுக்கான சிறப்பு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இம்முகாமில் மயிலாடுதுறை மாவட்டம் உள்பட பிற மாவட்டங்களிலிருந்து தனியாா் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்கள் நிறுவனத்திலுள்ள காலிப் பணியிடங்களுக்காக மாற்றுத்திறனாளி வேலைநாடுநா்களை தோ்வு செய்ய உள்ளனா். 18 முதல் 35 வயதுக்குள்பட்ட, 5-ஆம் வகுப்புமுதல் 12-ஆம் வகுப்புவரை படித்தோா், டிப்ளமோ, ஐடிஐ, பி.இ. உள்பட இதர பட்டதாரிகள் இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ளலாம்.
விருப்பமுள்ள மாற்றுத்திறனாளி வேலைநாடுநா்கள் சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதாா் அட்டை, பாஸ்போா்ட் அளவு புகைப்படம், முன் அனுபவம் ஏதும் இருப்பின் அதற்கான சான்றிதழ் நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
முகாமில் பங்கேற்க பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்படும். கூடுதல் விவரங்களுக்கு 04364299790 என்ற எண்ணை தொடா்பு கொள்ளுமாறும் ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.