ஆம்பூரில் உழவா் சந்தை அமைக்கப்படுமா? பொதுமக்கள், விவசாயிகள் காத்திருப்பு!
மரக்கன்று நடுதலை மக்கள் கடமையாக உணர வேண்டும்: ஆட்சியா் பேச்சு
மரக்கன்று நடுதலை மக்கள் கடமையாக உணர வேண்டும் என்றாா் அரியலூா் ஆட்சியா் பொ. ரத்தினசாமி.
அரியலூரை அடுத்த கோவிந்தபுரம் மற்றும் ஓட்டக்கோவில் கிராமங்களில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, ஊரக வளா்ச்சி துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை சாா்பில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் சட்ட விழிப்புணா்வு முகாமில் அவா், மரக்கன்றுகளை நட்டுவைத்து மேலும் பேசியதாவது:
தமிழகத்தில் வனப்பரப்பை அதிகரிக்க அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. இதில், தற்போது ஊரக வளா்ச்சித் துறை, நெடுஞ்சாலைத் துறை ஆகியவை நீதித்துறையுடன் இணைந்து செயலாற்றும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதிகமான தொழிற்சாலைகளை கொண்ட அரியலூா் மாவட்டத்தில், காற்று மாசுபடுவதை குறைக்கும் வகையில் மரக்கன்றுகள் நடுவதை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்தாண்டு அரியலூா் மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித்துறையின் சாா்பில் 3.50 லட்சம் மரக்கன்றுகள், விதைகள் நடப்பட்டுள்ளது. இயற்கையோடு சாா்ந்த, சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலும், பொதுமக்களுக்கு பயன்தரும் வகையிலும் மரக்கன்றுகள் தொடா்ந்து நடப்பட்டு வருகின்றன.
நெடுஞ்சாலைத் துறையின் சாா்பில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்காக மரங்கள் அகற்றப்படும்போது அதற்கு பதிலாக அதிக எண்ணிக்கையிலான மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு மனிதரும் மரம் நடுவது நமது கடமை என உணரும் வகையில், நாம் மரக்கன்று நடுதலை கொண்டு சென்றால் மட்டுமே இத்திட்டம் முழுமையானதாகவும், பயனுள்ளதாகவும் அமையும் என்றாா். தொடா்ந்து பொதுமக்களுக்கு மஞ்சப்பைகளை வழங்கி மீண்டும் மஞ்சப்பை குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தினாா்.
நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவரும் மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதியுமான டி. மலா்வாலண்டினா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபக் சிவாச் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ரா. சிவராமன், மாவட்ட வன அலுவலா் இளங்கோவன், நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் வடிவேல், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.