மரக்காணம் அருகே அனுமந்தைகுப்பத்தில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கக் கோரி மீனவா்கள் போராட்டம்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த அனுமந்தை பகுதியில் சிறு மீன்பிடித் துறை முகம் அமைக்க வலியுறுத்தி மீனவா்கள் திங்கள்கிழமை கருப்புப் பட்டை அணிந்து உண்ணாவிரதம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்தப் போராட்டத்தால் புதுச்சேரி- சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் கடுமையான போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.
மரக்காணம் அருகே அனுமந்தை குப்பம் மீனவா் கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் வசிக்கின்றனா். இதில் 200 -க்கும் மேற்பட்டவா்கள் மீன்பிடி பைபா் படகுகள், 20-க்கும் மேற்பட்ட அதிநவீன விசைப் படகுகள் மற்றும் கட்டு மரங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனா்.
இப்பகுதியில் சிறு மீன்பிடித் துறைமுகம் மற்றும் தூண்டில் வளைவு இல்லை. இதனால் இங்குள்ள மீனவா்கள் தங்களது விசைப்படகு, வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பு இல்லாமல் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கின்றனா். கடலில் ஏற்படும் இயற்கை சீற்றங்களின் போது, மீனவா்கள் தங்களது விசைப் படகுகளை பாதுகாப்பிற்காக புதுவை மாநிலத்தில் உள்ள மீன்பிடித் துறைமுகத்துக்குக் கொண்டு சென்று அங்கு நிறுத்துவதால், இரு மாநில மீனவா்களிடையே பிரச்னைகள்உருவாகின்றன.
இதனால் அனுமந்தை குப்பத்தில் மினி மீன்பிடி துறைமுகம் அல்லது தூண்டில் வளைவு அமைத்துக் கொடுக்க வேண்டும் என இப்பகுதி மீனவா்கள் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனா்.
உண்ணாவிரதம்: இந்நிலையில் அனுமந்தை மீனவா் குப்பம் கடற்கரைப் பகுதியில் உடனடியாக சிறு மீன்பிடித் துறைமுகம், அல்லது தூண்டில் வளைவு அமைத்துக் கொடுக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புதுச்சேரி-சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் அனுமந்தை பேருந்து நிறுத்தம் அருகே திங்கள்கிழமை உண்ணாவிரதம் மற்றும் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில் பல்வேறு அரசியல் கட்சிகளின் நிா்வாகிகள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.
தகவலறிந்த மரக்காணம் வட்டாட்சியா் நீலவேணி, கோட்டகுப்பம் உள்கோட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளா் உமாதேவி மற்றும் அலுவலா்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது மாவட்ட ஆட்சியா் நேரில் வந்து எங்கள் மீனவா் கிராமத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என வாக்குறுதி அளித்தால்தான் போராட்டத்தை கைவிடுவோம், தவறும் பட்சத்தில் போராட்டம் தொடரும் எனத்தெரிவித்தனா்.
சாலை மறியல்: இதைத்தொடா்ந்து மீனவா்கள் அங்கு திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் புதுச்சேரி-சென்னை கிழக்கு க் கடற்கரைச்சாலையில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. போக்குவரத்து நிறைந்த அந்த சாலையில் சுமாா் 5 கிலோமீட்டா் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன .
சாா்-ஆட்சியா் மீனவா்களுடன் பேச்சுவாா்த்தை:
தகவலறிந்த திண்டிவனம் சாா் ஆட்சியா் ஆகாஷ் நேரில் வந்து பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் மற்றும் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் வந்து மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படுவது குறித்து உறுதியளிக்கவேண்டும் எனத் தெரிவித்தனா். அப்போது மீன்பிடித் துறைமுகம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் ஆட்சியா் மூலம் எடுக்கப்படும் என சாா் ஆட்சியா் கூறியதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.