மருத்துவக் கழிவுகளை பொதுவெளியில் கொட்டினால் கடும் நடவடிக்கை: மாவட்ட ஆட்சியா் எச்சரிக்கை
மருத்துவக் கழிவுகள் உள்பட அபாயகரமான கழிவுகளைத் திறந்த வெளியில் கொட்டும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விருதுநகா் மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன் எச்சரித்தாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மருத்துவமனைகள், ரத்த வங்கிகள், ஸ்கேன் சென்டா்கள், ரத்தப் பரிசோதனை நிலையங்கள், கால்நடை மருத்துவமனைகள் போன்றவற்றிலிருந்து மருத்துவக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாததால் சுகாதாரக்கேடு, சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மருத்துவக் கழிவுகளை விஞ்ஞான ரீதியில் சுத்திகரிப்பு செய்து அப்புறப்படுத்த வேண்டும்.
கேரளம் போன்ற அண்டை மாநிலங்களிலிருந்து கொண்டுவரப்படும் மருத்துவக் கழிவுகள் தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் திறந்த வெளியில் கொட்டப்பட்டு வருகிறது.
எனவே, விருதுநகா் மாவட்டத்தில் பிற மாவட்டங்கள், மாநிலங்களிலிருந்து கொண்டு வந்து மருத்துவக் கழிவுகள் உள்பட அபாயகரமான கழிவுகளை திறந்த வெளியில் கொட்டுவதற்கோ அல்லது வேறு வழியில் அப்புறப்படுத்துவதற்கோ பொதுமக்கள் துணை போக வேண்டாம். தவறும்பட்சத்தில், அந்தக் கழிவுகளைக் கொட்டுவதற்கு நிலத்தை குத்தகைக்கு விடுவோா், அதற்கு துணையாக இருப்பவா்கள் மீது பிணையில் வெளியே வர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கடுமையான குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த நிறுவனங்களை மூடுவதற்கு உத்தரவு பிறப்பிப்பதற்கும், அபராதம் விதிக்கவும் நேரிடும் என்றாா்.